search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் - வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நிறைவேற்றுவார்களா?

    தி.மு.க., ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட இம்மாவட்டம் அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு இன்று 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்லடம் தாலுகாவில் ஒரு வருவாய் கிராமமாக இருந்த திருப்பூர் தனி தாலுகாவாகவும், வருவாய் கோட்டமாகவும் வளர்ச்சி பெற்றது.

    பனியன் தொழில் காலூன்றி வளர்ந்ததே திருப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிமாவட்ட, வெளிமாநில மக்கள் திருப்பூரில் அதிகளவில் வசிக்கின்றனர். வந்தாரை வாழ வைக்கும் தொழில் நகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2009 பிப்ரவரி 22-ந்தேதி திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.

    தனி அலுவலராக இருந்த சமயமூர்த்தி முதல் கலெக்டராக பணியாற்றினார். தி.மு.க., ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட இம்மாவட்டம் அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சிகாலங்களில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

    வருவாய் கட்டமைப்பு, மாவட்டத்தின்மக்கள் தொகை 25 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் வெளிமாநிலங்களை சேர்ந்த 4 லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். 3 வருவாய் கோட்டங்கள், 9 தாலுகாக்கள், 35 பிர்காக்கள், 350 வருவாய் கிராமங்களுடன் மாவட்ட நிர்வாகம் சுழன்று கொண்டிருக்கிறது.

    உள்ளாட்சி அமைப்புகளானது ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள்,16 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 ஊராட்சிகள் மக்களுக்காக இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டம் இன்று 14-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 

    13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மாவட்டத்தில் 3 பாராளுமன்ற தேர்தல்கள், 3 சட்டசபை தேர்தல்கள், 2 உள்ளாட்சி தேர்தல்களும், 2முறை கூட்டுறவு சங்க தேர்தல்களும் நடந்துள்ளன. பல்வேறு அரசுத்துறைகளுடன் இயங்கும் மாவட்ட நிர்வாகத்தில் பல்வேறு வசதி, வாய்ப்புகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும் மேலும் சில அலுவலகங்களை தோற்றுவித்தால், மக்கள் பயன்பெறுவர் என்பதில் ஐயமில்லை. மாவட்டம் உருவாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்தும், திருப்பூர் மாவட்டத்துக்கு  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்படவில்லை. 

    அவ்வாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவானால், கூட்டுறவுத்துறை மேலும் வளர்ச்சி பெறும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட விற்பனைக்குழு அமைக்கப்பட்டு, அதற்கான தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை மட்டுமே நிர்வகிக்க முடிகிறது.

    உழவர் சந்தைகளை நிர்வாகம் செய்யும் உதவி இயக்குனர் பணியிடம் தோற்றுவிக்கப்படாமல் இருக்கிறது. தி.மு.க.,வின் அபார திட்டமாக விளங்கும்  உழவர் சந்தைகள் திட்டத்தை மேம்படுத்த, மாவட்ட விற்பனைக்குழுவில் உதவி அல்லது துணை இயக்குனர் பணியிட பிரிவை தோற்றுவிக்க வேண்டும்.

    உயர் சிகிச்சைக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனையும் இல்லை. தொழிலாளர் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., மண்டலம் அல்லது சரகம் அமைத்து தொழிலாளருக்கான சேவைகளை மேம்படுத்தி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். 

    திருப்பூர் மாவட்டத்தில் ‘பாஸ்போர்ட்’ பதிவு அலுவலகம் இல்லை. தமிழகத்தில் உள்ள மாநிலங்களில் வெளிநாடுகளுடன் அதிக தொடர்பு கொண்டுள்ளது திருப்பூர். இம்மாவட்ட தொழில்துறையினர் தொழில் முனைவோர் வசதிக்காக திருப்பூரில் பாஸ்போர்ட்’ சேவை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×