search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தென்னை மரத்தில் ஏறிய பீகார் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலி

    தென்னை மரத்தில் ஏறிய பீகார் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.
    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் பழைய இரும்பு கடையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோட்டூ (வயது30), இவரது உறவினர் கைலுரவிதாஸ் ஆகிய இருவரும் கடந்த 8 மாத காலமாக தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 16-ம் தேதி கைலுரவிதாஸ் தாய் இறந்து விட்டதாக கூறிய மோட்டூ, இரும்பு கடைக்காரர் பிரபாகரனிடம் பணம் பெற்றுக்கொண்டு, கைலுரவிதாஸுடன் பீகாருக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் இருவரும் பீகாருக்கு செல்லாமல், வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கணபதி நகரிலுள்ள தனியார் இரும்பு உருக்காலை தொழிலாளர் குடியிருப்புக்கு சென்று உறவினருடன் தங்கியுள்ளனர். இதையடுத்து, இருவரும் கடந்த 17-ம் தேதி மது அருந்திவிட்டு, மதுவில் இளநீர் கலந்து குடித்தால் அதிக போதை ஏறும் எனக்கருதி, அப்பகுதியிலுள்ள கோவிந்தராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் இளநீர் பறிக்க தொழிலாளி மோட்டூ ஏறினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து மோட்டூவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவரது நண்பர் கைலுரவிதாஸ் மற்றும் அக்கம் பக்கத்தினர் மோட்டூவை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தொழிலாளி மோட்டூ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோட்டூவின் அண்ணன் சிவ்ரவிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×