search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் முதன் முதலில் தேர்தலில் வாக்களித்த மகிழ்ச்சியில் இளம் வாக்காளர்கள்.
    X
    தஞ்சையில் முதன் முதலில் தேர்தலில் வாக்களித்த மகிழ்ச்சியில் இளம் வாக்காளர்கள்.

    தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு

    தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு ஆர்வமுடன் வரிசையில் நின்று மக்கள் ஓட்டு போட்டனர்.
    தஞ்சாவூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம் முதலே விறு விறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    பொது மக்கள் ஆர்வமுடன் வாக்கு மையங்களுக்கு வாக்களிக்க 7 மணிமுதல் வரத்தொடங்கி வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் வாக்காளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடையுடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    மேலும் வயதானவர்கள் காலையிலேயே சக்கர நாற்காலியில் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். இதே போல் மாற்றுத்திறனாளிகளும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது.

    டெல்டா மாவட்டங்களில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள மையங்களில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டெல்டா முழுவதும் 1397 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சி, 2 நகராட்சி, 20 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 750 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் 3600 பணியாளர்கள் பணியாற்றினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்டத்தில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
     
    காலை முதலே வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பெண்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்கு வந்தபோது பலர் தங்களது பிள்ளைகளையும் கூடவே அழைத்து வந்து வரிசையில் நின்றனர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க வரிசையில் நின்றபோது குழந்தைகளை கணவன்மார்கள் வாங்கி கொண்டு காத்திருந்தனர். 
     
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி பேரூராட்சியில் காலை 7 மணிக்கு முன்னதாக தேர்தல் அலுவலர் நெடுஞ்செழியன் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
    Next Story
    ×