search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்- மு.க.ஸ்டாலின்

    அ.தி.மு.க. ஆட்சியில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போலியான நகைகளையும் அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தேனாம்பேட்டை பெண்கள் கல்லூரியில் வாக்களித்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி 122-வது வார்டில் இன்று வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன்.

    பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் தொகுதிகளில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    உள்ளாட்சி அமைப்பு என்பது சிறு குடியரசு என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். அரசின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே நிறைவேற்ற முடியும் என்பதால் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கேள்வி:- கோவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கைதாகி இருக்கிறார்கள். அங்கு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளாரே?

    பதில்:- கோவையில் அ.தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு அட்டூழியங்கள், அயோக்கியத்தனங்கள் நடைபெற்றுள்ளன. இப்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அது ஒடுக்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் ராணுவத்தை வரவழைத்து தேர்தலை நடத்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.

    தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினர் இதுபோன்று செயல்பட்டுள்ளனர்.

    கேள்வி:- 9 மாத கால தி.மு.க. ஆட்சிக்கு பரிசளிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். கடந்த 9 மாதத்தில் நாங்கள் செய்துள்ள நல்லாட்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் நிச்சயம் அமையும்.

    கேள்வி:- எத்தனை மாநகராட்சிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்?

    பதில்:- 21 மாநகராட்சிகளையும் நிச்சயம் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    கேள்வி:- நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அ.தி.மு.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதே?

    பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போலியான நகைகளையும் அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள்.

    சில இடங்களில் வெறும் பொட்டலங்களை மட்டும் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் முறைப்படுத்தி வருகிறோம். உரிய விதிமுறைகளுடன் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் முறையாக ஆய்வு செய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    Next Story
    ×