என் மலர்
உள்ளூர் செய்திகள்

மடிப்பாக்கத்தில் வயதான தம்பதி தூக்கு போட்டு தற்கொலை
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், டாக்டர் ராமமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 76). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி பாப்பா (76). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நம்பி ராஜனுக்கு நுரையீரல் பிரச்சினையும், பாப்பாவிற்கு கேன்சர் வியாதி இருந்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலக் குறைவு காரணமாக இருவரும் கடும் அவதி அடைந்தனர். உதவிக்கு யாரும் இல்லாததால் கடும் மன நெருக்கடி இருந்து வந்தனர்.
இதையடுத்து நம்பிராஜனும், அவருடைய மனைவி பாப்பாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று மதியம் இவர்கள் வீட்டில் உள்ள 2 அறைகளில் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் நம்பிராஜனுடைய தம்பி சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தார். அப்போது நம்பிராஜனும், பாப்பாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாததாலும், உடல்நலக் குறைவு மற்றும் குழந்தை இல்லாத மனவேதனையில் வயதான தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






