என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் கைது

    மயிலாத்தாள் திருட்டு குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட செங்கோடம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மயிலாத்தாள்( வயது 70). கணவர் இறந்த நிலையில் மயிலாத்தாள் தனியே வசித்து வருவதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடந்த 8ந்தேதி அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மயிலாத்தாளிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் கொண்டுவந்து தந்த போது தண்ணீர் குடித்துவிட்டு மயிலாத்தாள் எதிர்பாராத சமயத்தில், அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை, மர்ம நபர்கள் பிடிங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். 

    இதனால் அதிர்ச்சியடைந்த மயிலாத்தாள் இந்த திருட்டு குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மேற்பார்வையில், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். 

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கேத்தனூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி ரவிக்குமார்(45) என்பவர் கேத்தனூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் இலவந்தி கிராமம் நோக்கி சென்றுள்ளார். இலவந்தி அருகே செல்லும்போது திடீரென அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த அரை பவுன் தங்க செயினை பிடிங்கிக்கொண்டு வழிப்பறி செய்தனர். 

    அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கவனித்த ரவிக்குமார், இந்த கொள்ளை சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் பெயர் கண்டுபிடித்தபோது அது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பவின் குமார்(25) என்பது தெரியவந்தது . 

    இதையடுத்து பவின் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரித்தபோது, அவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த அய்யனார் மகன் மாரீஸ்வரன் (28) என்பவருடன் சேர்ந்து செங்கோடம்பாளையம் மயிலாத்தாளிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்ததும், மாரீஸ்வரன், மற்றும் மேட்டுப்பாளையம் வீரபாண்டியை சேர்ந்த சதீஷ்( 18) ஆகிய இருவருடன் சேர்ந்து 3 பேருமாக கேத்தனூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி ரவிக்குமாரிடம் கத்தியைக் காட்டி  மிரட்டி அரை பவுன் செயினை பறித்து சென்றதும் தெரியவந்தது.  

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் 3.50 பவுன் தங்க நகைகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×