என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணை பகுதிகளில் சாரல் மழை நீடிப்பு
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
நெல்லையில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 10 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 6 மில்லி மீட்டரும் பெய்தது.
அணைகளை பொறுத்த வரை 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 102.40 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 106.23 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 107.85 அடியாகவும் உள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 216 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. மருதூர் கால்வாயில் இருந்து உபரியாக 40 கன அடி நீர் மட்டும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. புறநகர் பகுதியில் சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி, ராதாபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மழை பெய்வதால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, சிவகிரி பகுதியில் மட்டும் நேற்று பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கருப்பாநதி அணை பகுதியில் அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழையும், சிவகிரியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்டவற்றில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு பாதியாக குறைந்துள்ளது.
132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 57.25 அடியாகவும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 41.50 அடி யாகவும், 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 51 அடியாகவும் உள்ளது. அணைகளில் வேகமாக நீர் குறைந்து வருகிறது.






