என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள அறுவடை எந்திரங்கள்
பூதலூர் வட்டாரத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்
பூதலூர் வட்டாரத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
பூதலூர்:
பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பாண்டு 16 ஆயிரம் ஏக்கரில் சம்பா, 11 ஆயிரம் ஏக்கரில் தாளடியும் பயிரிடப்பட்டுள்ளன.
மொத்தம் 27 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு உள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. முன் பட்ட சம்பா பயிர்கள் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் அறுவடைப் பணிகள் தீவிரமடையும் என்ற எண்ணத்தில் 12க்கும் மேற்பட்ட அறுவடை எந்திரங்கள் பூதலூரில் வந்து இறக்கி வைக்கப் பட்டுள்ளன.இங்கிருந்து அறுவடை நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவாக இதற்கென உள்ள முகவர்கள் விவசாயிகளை அணுகி வருகின்றனர்.
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பூதலூர் கிராமத்தில் இன்று (திங்கள்) நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாகவே நேரடி கொள்முதல் நிலைய வளாகத்தில் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டுவந்து குவித்துள்ளனர்.
அறுவடை தொடங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்த பின்னர் கொள்முதல் நிலையம் திறப்பது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு எடுத்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். கள ஆய்வு செய்து எந்த கிராமத்தில் அறுவடை செய்யப்பட உள்ளது என்பதை தெரிந்து முன் கூட்டியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆன்லைன் பதிவு முறையில் கொள்முதல் பணிகள்நடைபெற்றால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தினர் முன்கூட்டியே நேரடி கொள்முதல் நிலையம் திறக்க தாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை.
முழுவீச்சில் அறுவடை பணிகளை மேற்கொள்ள அறுவடை இயந்திரங்கள் பூதலூர் பகுதிக்கு வந்து விட்ட நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.
Next Story






