search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    முன்னாள் நீதிபதி ரவிராஜ் பாண்டியன் மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

    முன்னாள் நீதிபதி ரவிராஜ் பாண்டியன் இழப்பால் வாடும் நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரவிராஜ் பாண்டியன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையில், ‘திருவீழி மிழலைச் சகோதரர்கள்’ எனப் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். 1977-ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று புகழ்பெற்ற வழக்கறிஞர்களான கே.பராசரன், எஸ்.ராஜாராம், எஸ்.ஜெகதீசன் ஆகியோரிடம் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றார். பின்னர் 1991-ம் ஆண்டு வழக்கறிஞராகத் தனியாக பணியாற்றிய அவர், 2000-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    2000 முதல் 2010 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவர் 8 தலைமை நீதிபதிகளின் கீழ் பணியாற்றி பல்வேறு அமர்வுகளில் 1,00,926 வழக்குகளை விசாரித்தார். அவற்றுள் பல முக்கியத் தீர்ப்புகளையும் வழங்கி, சட்ட நிபுணர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார். அவரது ஈடு செய்ய முடியாத இழப்பால் வாடும் நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×