search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலம்
    X
    பாலம்

    மதுரை மேயர் முத்து பாலம் புதுப்பொலிவு பெறுகிறது

    ரூ. 3.30 கோடி செலவில் மதுரை மேயர் முத்து பாலம் புதுப்பொலிவு பெறுகிறது
    மதுரை

    மதுரை மாநகரில் உள்ள பாரம்பரிய பழமைவாய்ந்த மேம்பாலங்களில், மேயர் முத்து பாலம் குறிப்பிடத் தக்க ஒன்று. இது பெரியார் பஸ் நிலையம் அருகே திருப்பரங்குன்றம் பிரதான சாலையில், சுப்பிர மணியபுரத்தில் அமைந் துள்ளது. 

    திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் நிலையத்தை அடையவேண்டும் என்றால் பெரும்பாலும் மேயர் முத்து பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஹீரா நகர், திடீர் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மேம்பாலம் கடந்த 1971&ம் ஆண்டு கட்டப் பட்டது. 40 ஆண்டுகளை கடந்து விட்ட இந்த பாலம் தற்போது பழுதாகி வருகிறது.  

    இதற்கிடையே அதிக எடை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களாலும், அதிக வேகத்தில் செல்லும் ஆம்னி பஸ்களாலும் பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. இதனால் அந்த பாலம் பலவீனம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு தூணிலும் வெளிப்புற ப்ளாஸ்டெரிங் தேய்ந்துவிட்டது. தாங்கு தூண்களின் இரும்பு கம்பிகள் பல இடங்களில் துருப்பிடித்து காணப்படுகின்றன.

    பாலத்தின் அடிபகுதி- தூண்களில்  செடிகள் முளைத்து விரிசல், சிதைவுகள் ஏற்பட்டு உள்ளன. அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டு நிற்கின்றன. சிமெண்ட் கான்கிரீட்கள், கைப்பிடி சுவர்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து நிற் கின்றன. பாலத்தின் இணைப்பு கம்பிகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே கனரக வாகனங்கள் சென்றால்  மேம்பாலத்தில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படுகிறது.

    எனவே “மேயர் முத்து பாலத்தில் 10 டன் எடைக்கும் மேற்பட்ட உடைய சரக்கு வாகனங்கள் செல்லக்கூடாது, 10 டன்னுக்கு குறைவான பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் 30 கி.மீ.  வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது” என்று மாவட்ட நிர்வாகம், மேம்பாலத்தின் இருபுறங்களிலும் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்து உள்ளது. இதுதவிர பாலத்தின் இரு மருந்துகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் மேற்கண்ட விதிகளை மீறி அதிக எடைகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தை கடந்து செல்கிறது. போலீசாரும் இதனை கண்காணிப்பதில்லை. 

    மேயர் முத்து பாலத்தின் மேற்பகுதியில் விரிசல்- பள்ளங்கள் ஆகியவை பல்லை காட்டுகின்றன. எனவே அதில் வாகனங்கள் நிலைதடுமாறி செல்கின்றன. வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்வதை பார்க்க முடிகிறது. கவனம் பிசகினால் தலை குப்புற விழ வேண்டியதுதான். மதுரை மேயர் முத்து பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் சுமார் 5 ஆயிரம் போக்குவரத்து என்ஜினீயரிங் மெட்ரிக் யூனிட் எடையில் வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே பாரம்பரிய பழமை வாய்ந்த மேயர் முத்து பாலத்தை அரசாங்கம் உடனடியாக மராமத்து செய்து சீரமைக்க வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது இந்த பாலம் மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

    பாலத்தை சீரமைப்பது குறித்து மதுரை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட தலைமை பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் கூறுகையில், “மேயர் முத்து பாலம் சுமார் ரூ.3.30 கோடி செலவில் மறுசீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  பாலத்தை நவீன கருவிகள் மூலம் பரிசோதித்து  பலப்படுத்தும் பணி நடக்கிறது. பாலத்தின் அஸ்திவார பகுதியை அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வலுப்படுத்த உள்ளோம். 

    அடுத்தபடியாக மேம்பாலத்தின் நடுப்பகுதியை புதுப்பொலிவூட்டும் பணி அடுத்த சில வாரங்களில் தொடங்கும். இதன்மூலம் முத்து பாலத்தின் பலத்தை மேலும் 10 முதல் -15 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இயலும்“ என்றார். 
    Next Story
    ×