என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    பட்டியல் இனத்தவர்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு- சலூன் கடை நடத்துபவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை

    பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள புகார் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 150 குடும்பங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுக்கப்படுவதாகவும், மேலும் மிரட்டப்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதனால் முடி வெட்டுவதற்காக கறம்பகுடி நகருக்குச்செல்ல வேண்டியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதுப்பட்டிக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தீண்டாமையை பின்பற்றுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    கடந்த 9-ந்தேதி தாக்கல் செய்த இந்த மனு நீதிபதி பரேஷ் உபாத்யா கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் உள்ள வி‌ஷயம் உண்மையாக இருந்தால் பெரும் அதிர்ச்சி தரும் வி‌ஷயமாகும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தனது அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கினார். இதில் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், கோர்ட்டில் மனு தாக்கல் செய்த செல்வம் மற்றும் முடிதிருத்தும் சலூன் கடை வைத்திருப்பவர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் நேரில் ஆஜரானார்கள். தற்போதைய சூழ்நிலையில் புதுப்பட்டி பகுதி பட்டியலின் மக்களின் பாதுகாப்பு அடிப்படையாக கொண்டு நேரில் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தப்படவில்லை.

    பட்டியலின் மக்களின் எண்ண கருத்தின் அடிப்படையில் வருகிற திங்கட்கிழமை நேரில் புதுப்பட்டி கிராமத்திற்கு சென்று கள ஆய்வு நடத்தி, கோட்டாட்சியர் அபிநயா விசாரணை நடத்த இருக்கிறார். தொடர்ந்து அங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள இந்த புகார் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×