என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்
    X
    வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்

    நம்பியூர் பகுதியில் 6 நாட்களாக தேடியும் சிக்கவில்லை - சிறுத்தை வனப்பகுதிக்கு தப்பி ஓட்டம்?

    வனத்துறையினர் இருகாலூர், எலத்தூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றது. தொடர்ந்து மறுநாள் செட்டியம்பதி என்ற பகுதியில் 2 ஆடுகளை அடித்துக் கொன்றது.

    இந்நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி நடந்தது.

    வனத்துறையினர் இருகாலூர், எலத்தூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் தெர்மல் கேமரா மூலம் சிறுத்தையை தேடினர். தெர்மல் கேமராவில் 300 மீட்டர் தொலைவிற்கு அசையும் விலங்கு மற்றும் பொருட்களை காண முடியும்.

    இந்நிலையில் இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது. அப்போது காட்டு விலங்குகள் எதுவும் தென்படவில்லை. எனவே சிறுத்தை வேறு இடத்துக்கு சென்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டி.என். பாளையம் வனசரகர் கணேஷ்பாண்டியன் கூறும்போது, சிறுத்தை வனப்பகுதியை நோக்கி சென்றிருக்கலாம் என தெரிகிறது. மேலும் சில நாட்களுக்கு சிறுத்தையை வனகுழுவினர் தேட உள்ளனர்.

    பொதுமக்கள் வனத்துறையினருக்கு சரியான தகவல்களை தரவேண்டும். இரவு நேரங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அருகில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தவறான தகவல்களை கொடுத்து பீதியை ஏற்படுத்துகின்றனர் என்றார்.

    நம்பியூர் பகுதியில் 6 நாட்களாக தேடியும் சிறுத்தை தென்படவில்லை. எனவே சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×