search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவர்சன்
    X
    ஸ்ரீவர்சன்

    மரக்காணத்தில் பஸ்சில் தவறவிட்ட குழந்தையை வாங்க முடியாமல் சென்னை பெற்றோர் தவிப்பு

    மரக்காணத்தில் பஸ்சில் தவறவிட்ட குழந்தையை திரும்ப பெற பெற்றோர் ஆவணங்களுடன் இன்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளனர்.
    சென்னை:

    மரக்காணம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ்சில் ஒரு பயணி தனது 3 மாத குழந்தையை மற்றொரு பெண் பயணி சரஸ்வதி என்பவரிடம் கொடுத்து விட்டு இறங்கி சென்றுவிட்டார். கோட்டக்குப்பம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு மாவட்ட நிர்வாகத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அரசு பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று சென்றனர். குழந்தையை தவறவிட்டது எப்படி என்பதை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    குழந்தையின் தந்தை கவியரசு (28) பெயிண்டராக வேலை பார்க்கிறார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த விமலா (32) என்ற கணவரை இழந்த பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஸ்ரீவர்சன் என்று பெயர் சூட்டினார்கள்.

    விமலா வேலூரில் ரோட்டோரத்தில் தள்ளுவண்டி கடையில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று கவியரசு வேலூர் சென்று விமலாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது விமலா ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி கொண்டு செல்லும்படி கூறியிருக்கிறார். கவியரசும் குழந்தையை எடுத்துக் கொண்டு இரவு 11 மணியளவில் பாண்டிச்சேரி பஸ்சில் ஏறி இருக்கிறார்.

    அந்த பஸ் கல்பாக்கத்தில் நின்றபோது இயற்கை உபாதையை கழிப்பதற்காக குழந்தையை பஸ்சில் இருந்த பெண் பயணியிடம் கொடுத்துவிட்டு இறங்கி இருக்கிறார்

    அவர் வருவதற்குள் பஸ் புறப்பட்டு சென்று விட்டது. இதனால் பதட்டம் அடைந்த கவியரசு அடுத்து வந்த பஸ்சில் ஏறி பாண்டிச்சேரி சென்று குழந்தையை தேடி இருக்கிறார்.

    பின்னர் குழந்தையை தவறவிட்டது பற்றி விமலாவிடம் சொல்லி அழுதுள்ளார். உடனே விமலா கண்ணகி நகருக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விபரங்களை தெரிவித்தனர்.

    ஆனால் குழந்தை அவர்களுடையதுதான் என்பதற்கான ஆதாரம் எதுவும் அப்போது அவர்களிடம் இல்லை. மேலும் குழந்தை ஸ்ரீவர்சனை அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிட்டதால் ஆதாரங்களை காட்டி கலெக்டர் மூலம் தான் வாங்க முடியும் என்றனர்.

    இதையடுத்து அவர்கள் ஆவணங்களுடன் இன்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்திக்க செல்கிறார்கள்.
    Next Story
    ×