search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    தென்காசி மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு- தி.மு.க. இளைஞரணி நிர்வாகி உள்பட 10 பேர் மீது வழக்கு

    கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தேர்தலில் முன்னுரிமை வழங்க தி.மு.க. தலைமை கேட்டு கொண்டுள்ளது. அது போலவே நாங்கள் சீட் வழங்க பரிந்துரை செய்துள்ளோம். ஆனால் சம்பந்தபட்ட நபர் சுயலாபத்திற்காக சீட் வழங்க கேட்டு கொண்டதால் வழங்க முடியவில்லை.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக சிவபத்மநாதன் இருந்து வருகிறார்.

    நேற்று சங்கரன்கோவிலில் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு கடையநல்லூரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

    குத்துக்கல்வலசை அருகே ஒரு டீக்கடையில் அவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் சிவபத்மநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே அந்த நபர்கள் அங்கிருந்த குப்பை தொட்டியை சிவபத்மநாதனின் கார் கண்ணாடி மீது வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்து அதன் துகள்கள் சிவபத்ம நாதன் மீது தெறித்தன.

    மேலும் அந்த கும்பல் சிவபத்மநானின் உதவியாளர் சுரேஷ் கண்ணனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் காயம் அடைந்த சுரேஷ் கண்ணன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுதொடர்பாக அவர் இலத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் சிவபத்மநாதன் மற்றும் அவரது உதவியாளரிடம் தகராறில் ஈடுபட்டது சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜதுரை மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜதுரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

    நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனது உறவினரான அண்ணாமலைக்கு அவர் சீட் கேட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ராஜதுரை தனது உறவினர் அண்ணாமலை, ராசய்யா மற்றும் நண்பர்களுடன் சென்று மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதனுடன் தகராறு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜதுரை, அண்ணாமலை, ராசய்யா மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 7 பேர் உள்பட மொத்தம் 10 மீது 294-பி(தகாத வார்த்தைகள் பேசுதல்), 147(கலகம் செய்தல்), 355, 427(சொத்தை சேதப்படுத்துதல்), 323 (காயப்படுத்தும் செயல் புரிதல்), 506/2 (மிரட்டல் விடுதல்) ஆகிய 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    சம்பவம் தொடர்பாக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கூறியதாவது:-

    கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தேர்தலில் முன்னுரிமை வழங்க தி.மு.க. தலைமை கேட்டு கொண்டுள்ளது. அது போலவே நாங்கள் சீட் வழங்க பரிந்துரை செய்துள்ளோம். ஆனால் சம்பந்தபட்ட நபர் சுயலாபத்திற்காக சீட் வழங்க கேட்டு கொண்டதால் வழங்க முடியவில்லை.

    நடந்த சம்பவம் தொடர்பாக தலைமை கழகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×