என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி பகுதியில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வாகையூர் கிராமத்தில் சாலை ஓரம் காலனியில் ஸ்ரீ நல்லதங்காள் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் அந்த கோவிலில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த போது கோவில் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உள்புறம் வைத்திருந்த உண்டியல் காணவில்லை. இந்த கோவிலில் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தினர்.
கோவில் உண்டியலில் ஒரு லட்சம் ரூபாய் மேல் பணம் இருக்கும் என கூறுகின்றனர். திருடர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். அப்பகுதியை சுற்றி பல இடங்களில் தேடியும் உண்டியல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 2 தினங்களாக ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நேற்று இரவு கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.






