என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலி
    X
    பலி

    அஞ்செட்டி வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி

    அஞ்செட்டி வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் அந்த பகுதி மக்கள் காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று போராட்டம் செய்து இருந்தனர். இதற்கு வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று கூறியதால் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் மாடு மேய்க்க சென்ற முதியவர் ஒற்றை யானை தாக்கி பலியான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 70). விவசாயி. இவருக்கு சரோஜா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அந்தக் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் இவரும் கூட்டமாக ஆடுகளை மேய்க்க சென்றுள்ளனர். ஆடுகளை மேய்த்து மாலையில் அனைவரும் ஆடுகளுடன் வீடு திரும்பியுள்ளனர்.

    வரும் வழியில் யானையின் பிளறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பீதி அடைந்த அவர்கள் வேகமாக ஓடி வீடு திரும்பினர். இதில் கன்னியப்பன் மட்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் உள்ள சின்ன வண்ணாத்திப்பாறை என்ற இடத்தில் கன்னியப்பன் உடலில் காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்ததும் உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒற்றை யானை தாக்கி கன்னியப்பன் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன் மற்றும் வனத்துறையினர் அஞ்செட்டி காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் ஒற்றை யானை தாக்கி பலியான கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து வனப்பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×