search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்டிஓ விசாரணை
    X
    ஆர்டிஓ விசாரணை

    கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை

    கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் முககவசம் அணியாமல் வந்த குற்றத்துக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் போலீசாரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாக அப்துல் ரஹீம், போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு போலீஸ் ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்தரகுமார் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

    கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீமா, காவலர் ஹேமநாதன் ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டம், வியாசர்பாடி பகுதியினை சேர்ந்த அப்துல் ரஹீம் (வயது 21) கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்களால் தான் துன்புறுத்தப்பட்டதாக அளித்த புகாரின் மீது சென்னை வடக்கு உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், மேற்படி புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் சென்னை வடக்கு உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×