search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைகள் தாக்கியதில் பலியான பசு மாடு அருகே சோகத்துடன் விவசாயி, அவரது மனைவி உள்ளனர்.
    X
    யானைகள் தாக்கியதில் பலியான பசு மாடு அருகே சோகத்துடன் விவசாயி, அவரது மனைவி உள்ளனர்.

    தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்து பசுமாட்டை அடித்துக்கொன்ற யானைகள்- வனத்துறை மீது கிராம மக்கள் புகார்

    வனத்துறைக்கு தகவல் அளித்தும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மொத்தம் 10 வன சரகங்கள் உள்ளன.

    இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனசரகத்தில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தா (60) விவசாயி. இவர் 6 மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் இவர் தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.

    இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் மல்லன்குழி ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாயி புட்டுசித்தாவுக்கு சொந்தமான மாட்டு கொட்டகை தடுப்பு சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் உள்ளே கட்டப்பட்டு இருந்த ஒரு பசுமாட்டை குத்தி கொன்றது. அப்போது சத்தம் கேட்டு புட்டுசித்தா வெளியே வந்து பார்த்தார். அப்போது யானைகள் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் ஊர் பொதுமக்கள் சத்தம் போட்டு பட்டாசு வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இது பற்றி கிராம மக்கள் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை இன்று ஊருக்குள்ளே புகுந்து மாட்டை கொன்றுள்ளது. ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இறந்த பசு மாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம், ஆசனூர் வனப்பகுதியில்இரவு காவல் பணியில் இருந்த 2 விவசாயிகள் ஒற்றை யானை தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் தாளவாடி பகுதியில் யானைகள் கிராமத்துக்குள் நுழைந்து பசுமாட்டை அடித்து கொன்ற சம்பவம் அநத பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×