search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை தொடங்கி வைத்து விட்டு அமைச்சர் சந்திர பிரியங்கா பஸ்சில் பயணம் செய்தார்
    X
    கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை தொடங்கி வைத்து விட்டு அமைச்சர் சந்திர பிரியங்கா பஸ்சில் பயணம் செய்தார்

    காரைக்காலில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா- அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்

    காரைக்காலில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
    காரைக்கால்:

    புதுச்சேரி சாலை போக்குவரத்துகழகம் சார்பில், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பு கருதி அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக புதுச்சேரியில் இயங்கும் 3 பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காரைக்காலில் 3 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து பஸ்சில் பயணம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பஸ் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    பயணிகள் ஏதேனும் குறைகள் தெரிவிக்க விரும்பினால், பஸ்சில் ஒட்டியிருக்கும் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களில் பயணம் செய்வோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முக கவசம் அணிவது கட்டாயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை, மக்கள் பயன்பாட்டிற்கு வந்து வெகு நாட்களாகியும், மின் விளக்குகள் இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மேற்கு புறவழிச்சாலையில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    அதற்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, பொதுப்பணித்துறை மூலம் ரூ.2 கோடியில் சூரியசக்தி உயர் மின்விளக்கு பொருத்த திட்டம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீரசெல்வம், நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், மின்துறை உதவி செயற்பொறியாளர் அனுராதா, போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×