என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழகேசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    அழகேசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    காதல் தகராறில் பட்டதாரி வாலிபரை கொன்று ஏரியில் உடல் வீச்சு?- உறவினர்கள் மறியல்

    காதல் பிரச்சினையில் அழகேசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பட்டு சாமி-கம்சலை தம்பதியரின் மகன் அழகேசன் (வயது 19). சிவில் என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    அழகேசன் குழந்தையாக இருக்கும்போது தாய் கம்சலையும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பட்டு சாமியும் இறந்து விட்டனர். பெற்றோரை இழந்த அழகேசனை பெரியம்மா கவுசல்யா வளர்த்து வந்தார். அவரும் அழகேசனை தனது குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி படிக்க வைத்தார்.

    இதற்கிடையே அழகேசன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. மேலும் காதல் பிரச்சினை தொடர்பாக சிலருடன் முன்விரோதமும் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் முன்னூரான் காடுவெட்டியில் உள்ள ஆசனேரி ஏரியில் அழகேசன் நேற்று இரவு பிணமாக மிதந்தார். இது பற்றிய தகவல் அந்த ஊர் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அங்கு ஏராளமானோர் திரண்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஏரியில் பிணமாக கிடந்த அழகேசனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காதல் பிரச்சினையில் அழகேசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அழகேசனும், அருகில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அழகேசனை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டதாகவும் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கிராம மக்கள் ராகுலை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ஆனால் போலீசார் முறையான விசாரணை நடத்திய பின்னரே வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறி ராகுலை விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அழகேசனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொலை வழக்காக பதிவு செய்து ராகுலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஷாகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர் சுபா, உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ராகுலை கைது செய்தால் மட்டுமே நாங்கள் மறியலை கைவிடுவோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் கைது செய்ய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் வேன்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

    தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சந்தேகத்தின் பெயரில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், விசாரணை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, முடிவு வந்த பின்னர் கொலையா? தற்கொலையா? என மருத்துவர் உறுதி செய்ய வேண்டும். கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளி கண்டிப்பாக போலீசாரால் தண்டிக்கப்படுவார் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலைமறியல் போராட்டத்தால் வெளியூர் செல்ல வேண்டிய ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் ஜெயங்கொண்டம், விருத்தாசலம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



    Next Story
    ×