என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பக்தர்களின்றி நடக்கும் தைப்பூச திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ஒரே ஒரு நாள் கொண்டாடப்படும் திருவிழாவாக தைப்பூச திருவிழா உள்ளது. திருவிழாவின் விசேஷமாக ஒரே நேரத்தில் 2 தெய்வானையுடன், 2 முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வருவது தனிச்சிறப்பாகும்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பழனியாண்டவருக்கு என்று தனி கோவில் அமைந்துள்ளது. பழனியில் இருப்பதுபோல இங்குள்ள கருவறையிலும் பழனியாண்டவர் மட்டுமே தனிமையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இங்கும் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தைப்பூசத்தையொட்டி பழனியாண்டவருக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும். மேலும் “ராஜ அலங்காரம்“ நடக்கும்.
இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா நாளை (18-ந் தேதி) நடக்கிறது. கொரோனா வைரஸ் 3-வது அலை பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலால் ஊரடங்கில் அரசு நெறிமுறைக்கு உட்பட்டு சுவாமி நகர் உலா வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் உள்திருவிழாவாக தைப்பூச விழா நடக்கிறது. திருவிழாவையொட்டி சுப்பிரமணியசுவாமி, தெய்வானையும், முத்துக்குமாரசுவாமி, தெய்வானையுமாக சம காலத்தில் 2 தெய்வானை, 2 முருகப்பெருமான் எழுந்தருளி கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வருதல் நடக்கிறது.
இதேபோல பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவருக்கு 16 வகையான மகா அபிஷேகம், ராஜ அலங்காரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story