
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு முழுவதும் பனி அதிகமாக இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்துள்ளது.
மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென இரவு 7 மணி முதல் 7.30 வரை 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதியில் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ஓட்டை குட்டை, புளியம்கோம்பை, பண்ணாரி, வடவள்ளி, பவானிசாகர், திம்பம் மலைப்பகுதி போன்ற பகுதிகளில் இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.