search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினா கடற்கரை
    X
    மெரினா கடற்கரை

    நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் பொதுமக்களுக்கு தடை

    காணும் பொங்கல் தினத்தன்று முழு ஊரடங்கும் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த 6-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று (14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அதேபோன்று கடற்கரை, நீர் நிலைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பொங்கல் பண்டிகையை மக்கள் எப்போதும் 3 நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல், அதற்கு மறுநாள் காணும் பொங்கல் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக காணும் பொங்கல் தினத்தன்று கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பொழுதை போக்குவார்கள்.

    இதுபோன்ற கொண்டாட்டத்துக்காக வீடுகளிலேயே சமைத்து அதனை சுற்றுலா தலங்களுக்கு எடுத்துச் சென்று அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதும் காணும் பொங்கலின் சிறப்பாகும்.

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் யாருக்கும் அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக கடற்கரை பகுதிக்கு வர வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே காணும் பொங்கல் தினத்தன்று முழு ஊரடங்கும் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் மெரினா கடற்கரையில் போலீஸ் கண்காணிப்பு நாளை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மெரினா கடற்கரையில் சாதாரண நாட்களில் செல்வதற்கும் கடந்த 6-ந் தேதியில் இருந்தே தடை இருந்து வருகிறது. இதையடுத்து அங்கு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நாளை இந்த கண்காணிப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

    மெரினாவை போன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அதேபோன்று மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து இருக்கிறார்கள்.

    இதன் மூலம் தமிழகத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அதன் மூலம் அங்கு கடை வைத்துள்ள சிறிய வியாபாரிகளும் பயன் அடைவார்கள். அவர்களும் இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்கள் நாளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும், தேவை இல்லாமல் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×