search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊரடங்குக்கு பதில் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்க வேண்டும் - திருப்பூர் பின்னலாடை துறையினர் வலியுறுத்தல்

    தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதத்தினர் வீட்டுத்தனிமையில்தான் இருக்கின்றனர்.
    திருப்பூர்:

    ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பதிலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டும் போதும் என்று திருப்பூர் தொழில்துறையினர் விரும்புகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை துறையினர் கூறியதாவது:

    திருப்பூரில் பின்னலாடை உட்பட தொழிலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தியவர்களாக உள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருந்தால் அவர்களையும் செலுத்துமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

    திருப்பூர் உட்பட மாவட்டம் முழுவதும் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் முழுவீச்சில் தயாராகியுள்ளன. இரண்டாவது அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட வாய்ப்பில்லை.

    ஒருவேளை அத்தகைய நிலை உருவானால் மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. இதனால் நாம் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மேலும் தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதத்தினர் வீட்டுத்தனிமையில்தான் இருக்கின்றனர். 

    இரண்டாவது அலையின்போது தேவைப்பட்ட அளவு தீவிர சிகிச்சை என்பது  மூன்றாவது அலையின்போது குறைவாகவே உள்ளது.

    கடந்த இரு அலைகளிலும் திருப்பூர் பல்வேறு பொருளாதார சரிவுகளை சந்தித்திருக்கிறது. தொழில்துறையினர் சவால்களுக்கிடையே பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதற்குத் தயாராக இல்லை. தொற்றை சமாளிப்பதற்கான தீர்வுகளை அறிவியல் நமக்கு தந்திருக்கிறது. 

    குறிப்பாக திருப்பூரில் முதல் தவணை செலுத்தியோர் எண்ணிக்கை 100  சதவீதத்தை நெருங்கிவிட்டது. 15-8 வயதினருக்கான தடுப்பூசியும் வேகம் பெற்றுள்ளது. 

    தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகமானாலும் நோயின் தீவிரத்தன்மை குறைவாக இருப்பதும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதும் தமிழகத்தில், தற்போது அமலாவது போன்று வாரத்தில் ஒருநாள் என்ற எண்ணிக்கையில் வேண்டுமானால் முழு ஊரடங்கு இருக்கலாமே ஒழிய தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையில்லை.

    தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு தொடரலாம். அதேசமயம்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், வாரத்தின் அனைத்து நாட்களும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி தேவை.

    தொழிலகங்கள் நாட்டிற்கு முதுகெலும்பு போன்றவை. இவற்றின் இயக்கம் ஒருபோதும் தடைபட்டு விடக்கூடாது. தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்க வேண்டும். அதனை அரசுடன் இணைந்து தொழில்துறையினரும் மேற்கொள்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×