என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கொரோனா வைரஸ்
3-வது அலை: குதிரை பாய்ச்சலில் துரத்தும் கொரோனா - குப்புற தள்ளுமா? வீழுமா?
By
மாலை மலர்10 Jan 2022 9:30 AM GMT (Updated: 10 Jan 2022 5:38 PM GMT)

செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, காஞ்சீபுரம், சேலம், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கொரோனா...
ஒமைக்ரான்...
புளோரினா...
-இன்னும் என்னவெல்லாம் வரப்போவுதோ தெரியவில்லையே என்ற கவலை மக்களை வாட்டுகிறது.
எத்தனையோ வைரசை கையாண்ட மருத்துவ உலகமும் புதிதாக உருவெடுத்த கொரோனா வைரசையும் அதில் இருந்து உருமாறி உருமாறி தாக்கி வரும் வைரஸ் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த போராடுகிறது.
நமது நாட்டை பொறுத்தவரை 2020 ஜனவரி 31-ந்தேதி முதல்முதலில் ஒரு மாணவி மூலம் கேரளாவில் மூக்கை நுழைத்தது கொரோனா. அதன்பிறகு மெல்ல மெல்ல பல இடங்களிலும் பரவி தொற்று எண்ணிக்கை 500 ஆக இருந்த போதே மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
ஊரடங்கு தளர்வு வந்ததும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வேகத்தை காட்டியது. செப்டம்பர் மாதம் உச்சத்தை தொட்டது. அப்போது மொத்த தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டவில்லை.
புதுமையான வைரஸ், கட்டுப்படுத்தும் வழிமுறைகளோ, சிகிச்சை முறைகளோ அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அனுபவம் மூலம் பாடம் கற்றார்கள். அதைவைத்தே கொரோனாவை விரட்டும் வித்தையையும் கற்க தொடங்கினார்கள்.
அதேநேரம் முதல் அலையும் அடங்க தொடங்கியது. இனி அடங்கிவிடும் என்று எண்ணிய நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் மீண்டும் தலைதூக்க தொடங்கியது.
முழு தளர்வுகளால் மக்கள் அஜாக்கிரதையானார்கள். கூடவே தேர்தல் திருவிழா, பண்டிகை என்று மக்கள் கொண்டாட தொடங்கினார்கள். அதை சாதகமாக்கி கொரோனாவும் கும்மாளம் போட்டது.
மார்ச் 1-ந்தேதி 15 ஆயிரமாக இருந்த தொற்று எண்ணிக்கை ஏப்ரல் 1-ந்தேதி 72,330 ஆக உயர்ந்தது. மே 1-ந்தேதி கிடு கிடுவென்று உயர்ந்து 4 லட்சத்தை கடந்தது. மே மாதம் முதல் வாரத்தில் உச்சபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்தது. எதிர்பாராத அளவுக்கு உயிர்ப்பலியும் ஏற்பட்டது. தினசரி பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.

2-வது அலையில் பாதிப்பு
ஆக்சிஜன் தட்டுப்பாடு, வென்டிலேட்டர் தட்டுப்பாடு போன்ற மருத்துவ கட்டமைப்பு பலவீனத்தால் கொரோனாவின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்கமுடியவில்லை. அது மட்டுமல்ல 2-வது அலையின்போது கொரோனா டெல்டா வகையாக உருமாறியதால் அதன் வேகமும், தாக்கமும் அதிகமாக இருந்தது.

2-வது அலையில் பலி
முதல் அலையின் போது தொற்று ஏற்பட்டவர்கள் அபாய கட்டத்தை அடைய ஒரு வாரத்துக்கு மேலாகியது. ஆனால் 2-வது அலையின் போது 4 முதல் 5 நாட்களிலேயே அபாய கட்டத்தை நெருங்கினார்கள். அதற்கு காரணம் தொற்று ஏற்பட்டவர்களின் மூச்சு குழாய்களில் அதிக அடர்த்தியான வைரஸ்கள் இருந்தன.
மூக்கில் மாதிரியை எடுத்து சோதித்தபோது 700 கோடி வைரஸ் வரை இருந்ததாக கணக்கிட்டனர். வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூச்சுவிட்டால் ஒவ்வொரு முறையும் 20 வைரஸ் வரை வெளியே வந்தது. பேச ஆரம்பித்தால் ஒரு நிமிடத்தில் 200 வைரஸ், இருமினாலோ, தும்மினாலோ 200 மில்லியன் வைரஸ் என்ற எண்ணிக்கையில் வெளியேறியது.
அப்படியானால் அருகில் இருப்பவர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார் என்பது புரியும். இப்படித்தான் 2-வது அலையில் வேகமாகவும், வீரியமாகவும் மக்களை தாக்கியது. முதல் அலையின்போது சுமார் 1லட்சம் பேரையும், 2-வது அலையின் போது சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரையும் பலி கொண்ட கொரோனா மீண்டும் தலைதூக்கக் கூடாது என்பதுதான் எல்லோரது எண்ணமும்.

3-வது அலையில் பாதிப்பு
ஆனால் 3-வது அலையும் வரலாம் என்று உலகசுகாதார நிறுவனம் எச்சரித்ததால் அதையும் எதிர்கொள்ள தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி நாடுமுழுவதும் மருத்துவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டன.
இப்போது எதிர்பார்த்ததை போலவே 3-வது அலையும் வீசத்தொடங்கிவிட்டது. அதுவும் முந்தைய இரண்டு அலைகளையும் விட மிக வேகமாக பரவி வருகிறது. 2-வது அலையை விட 4 மடங்கு வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. 3-வது அலைக்கு காரணம் ஒமைக்ரான் வைரசாகத்தான் இருக்கும் என்று கருதினர். இப்போது கொரோனா தொற்று உறுதி ஆவதில் 90 சதவீதம் ஒமைக்ரான் தொற்றாகவே இருக்கிறது.

3-வது அலையில் பலி
புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 7 மடங்காக உயர்ந்துள்ளது. முதல் அலையின் போது ஆயிரத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை 7 ஆயிரமாக உயருவதற்கு 58 நாட்கள் ஆனது.
2-வது அலையின்போது 7 ஆயிரத்தை கடக்க 26 நாட்கள் ஆனது. ஆனால் 3-வது அலையில் 7 ஆயிரமாக அதிகரிக்க 7 நாட்கள்தான் ஆகியிருக்கிறது. 3-வது அலை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே குதிரை பாய்ச்சலில் பாய்ந்து பரவுகிறது.
3-வது அலையை பொறுத்த வரை 1-ந்தேதி 8 ஆயிரத்து 340 ஆக இருந்தது. மறுநாளே 9 ஆயிரத்து 304 ஆக அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.80 லட்சத்தைக் கடந்துள்ளது.
மூன்றாவது அலை தொடங்கிய ஒரிரு நாட்களிலேயே சென்னை ஹாட்ஸ்பாட்டாக மாறிவிட்டது.
அலைகளும்பரவியவேகமும் | |||||
2-வதுஅலை | 3-வதுஅலை | ||||
தேதி | எண்ணிக்கை | பலி | தேதி | எண்ணிக்கை | பலி |
12.05.2021 | 30,355 | 293 | 28.12.2021 | 619 | 6 |
13.05.2021 | 30,261 | 297 | 29.12.2021 | 739 | 8 |
14.05.2021 | 31,892 | 288 | 30.12.2021 | 890 | 7 |
15.05.2021 | 33,658 | 303 | 31.12.2021 | 1155 | 11 |
16.05.2021 | 33,181 | 311 | 01.01.2022 | 1489 | 8 |
17.05.2021 | 33,075 | 335 | 02.01.2022 | 1594 | 6 |
18.05.2021 | 33,059 | 364 | 03.01.2022 | 1728 | 6 |
19.05.2021 | 34,867 | 365 | 04.01.2022 | 2731 | 9 |
20.05.2021 | 35,579 | 397 | 05.01.2022 | 4862 | 9 |
21.05.2021 | 36,184 | 467 | 06.01.2022 | 6983 | 11 |
22.05.2021 | 35,873 | 448 | 07.01.2022 | 8981 | 8 |
23.05.2021 | 35,843 | 448 | 08.01.2022 | 10978 | 10 |
24.05.2021 | 34,867 | 404 | 09.01.2022 | 12895 | 12 |
செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, காஞ்சீபுரம், சேலம், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 15-ந்தேதிதான் தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த பயணிக்கு உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுவரை 185 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகி உள்ளது. அதேநேரம் உயிர்சேதம் ஏதும் நிகழவில்லை.
கடந்த 2 அலைகளின் போது சிகிச்சை அளித்த அனுபவத்தின் அடிப்படையில் கடந்த முறையைவிட இந்த அலையை சிறப்பாக சமாளிக்க முடியும். ஆனால் அதிகப்படியான காய்ச்சல் காரணமாக உடல்நல பாதுகாப்புக்கு அழுத்தம் அதிகமாக இருக்கலாம். அதேநேரம் அலை அலையாக வரும் கொரோனாவால் ஓய்வு இல்லை என்பதால் மருத்துவர்கள் மிகப்பெரிய மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அவர்களிடம் கேட்கும்போது ஆபத்து என்று ஓடி வருகிறார்கள். ஆனால் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட மன ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக ஆதங்கப்படுகிறார்கள். ஆனால் 2 முக்கியமான விசயங்களை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவோடு ஓட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒன்று முகக்கவசம் அணிதல், மற்றொன்று கூட்டங்களை தவிர்த்தல். இந்த இரண்டையும் கடைபிடிக்காவிட்டால் கொரோனா அலையை தடுப்பதும், தவிர்ப்பதும் சாத்தியமாகாது என்கிறார்கள்.

3-வது அலை மிக வேகமாக பரவினாலும் அதை எதிர் கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 2-வது அலையில் இருந்ததைவிட 3 மடங்கு அதிகமாக அதாவது 1900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு வசதி உள்ளது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பராமரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
எவ்வாறாயினும் கடந்த இரண்டு அலைகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பின் விரைவான விரிவாக்கம் ஆகியவை மாநிலத்தை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படியுங்கள்...ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
