search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    8 நாளில் 11,406 பேருக்கு பாதிப்பு: புத்தாண்டில் வேகமெடுத்த கொரோனா 3-வது அலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் டிசம்பர் மாத இறுதியில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. டிசம்பர் 27-ந்தேதி அன்று கொரோனா தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியது. அன்று 605 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

    சென்னையில் 172 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அப்போது செங்கல்பட்டில் 50 பேருக்கும், கோவையில் 88 பேருக்கும், ஈரோட்டில் 42 பேருக்கும், சேலத்தில் 25 பேருக்கும், நாமக்கலில் 20 பேருக்கும், திருப்பூரில் 39 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

    இதுவே வெளிமாவட்டங்களில் பதிவாகி இருந்த அதிக பாதிப்பாக இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்களிலேயே தினசரி பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து 28-ந்தேதி தினசரி பாதிப்பு 619 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் தினசரி தொற்று 194ஆக இருந்தது. 29-ந்தேதி தமிழகம் முழுவதும் 739 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னையில் 294 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது. ஒரே நாளில் சென்னையில் 100 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. அதற்கு மறுநாள் 30-ந் தேதி தினசரி பாதிப்பு 890 ஆகவும் சென்னையில் கொரோனா பாதிப்பு 397ஆகவும் அதிகரித்தது.

    கடந்த மாத இறுதியில் ஒரு நாள் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. அன்று மாநிலம் முழுவதும் 1155 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் புத்தாண்டு முதல் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா 3-வது அலை ஒமைக்ரான் உருவத்தில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.

    கொரோனா வைரஸ்

    கடந்த 1-ந்தேதி புத்தாண்டு அன்று 1,489 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. சென்னையில் 682 பேர் கொரோனாவால் அன்று முடங்கி இருந்தனர். 2-ந்தேதி ஒருநாள் பாதிப்பு முந்தைய நாளை விட மேலும் அதிகரித்தது. அன்றே 1594 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பாதிப்பு 776 ஆக உயர்ந்து இருந்தது. 3-ந்தேதி அன்று 1,728 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் 876 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.

    4-ந்தேதியில் இருந்து கொரோனா தொற்று வேகம் எடுக்கத்தொடங்கியது. ஒரே நாளில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்தது. 3-ந்தேதி அன்று 1,728 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மறுநாள் 2,731 பேர் கொரோனா தொற்றால் முடங்கினர்.

    சென்னையிலும் முந்தைய நாள் பாதிப்பை விட (876) நோய் தொற்று அதிகரித்தது. 4-ந்தேதி அன்று 1,489 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    5-ந்தேதி அன்று கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் இரட்டிப்பு எண்ணிக்கையில் பதிவானது. முந்தையநாள் பாதிப்பு 2,731 ஆக இருந்த நிலையில் 5-ந்தேதியன்று 4,862 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இது சுகாதாரத்துறை மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

    இதையடுத்து அன்று முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

    கடந்த 6-ந்தேதியில் இருந்து கொரோனா பரவல் வேகம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. 3 நாட்களாக மின்னல் வேகத்தில் நோய் தொற்று பதிவாகி வருகிறது. கடந்த 6-ந்தேதியன்று 6,983 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 3,759 ஆக உயர்ந்து இருந்தது.

    7-ந்தேதி அன்று 8,981 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 4,531 பேர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இப்படி தினசரி பாதிப்பு தினமும் டபுள் மடங்காக உயர்ந்துகொண்டே சென்றதால் நேற்று முன்தினம் (8-ந்தேதி) தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒருநாள் பாதிப்பு 10,978 ஆக பதிவாகி இருந்தது.

    சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்தொற்று ஏற்பட்டு இருந்தது. 8-ந்தேதி அன்று சென்னையில் 5 ஆயிரத்து 98 பேருக்கு பாதிப்பு பதிவாகி இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 6,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12,895 பேர் ஒரேநாளில் கொரோனாவால் முடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் பொது இடங்களில் மக்கள் கட்டுப்பாடு இன்றி கூடி வருகிறார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில் மீன் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இறைச்சி வியாபாரம் நடைபெறும் இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.

    கொரோனா பரவல் சத்தம் இல்லாமல் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


    Next Story
    ×