search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் வேலுவிடம் மனு கொடுத்த காட்சி.
    X
    அமைச்சர் வேலுவிடம் மனு கொடுத்த காட்சி.

    தென்காசியில் புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்தகோரி அமைச்சரிடம் மனு

    தென்காசி நகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் வேலுவிடம் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மனு அளித்துள்ளார்
    தென்காசி:

    பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவை  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் (2006-2011) தென்காசி நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த திட்டமானது கிடப்பில் போடப்பட்டது. 

    தற்போது தென்காசி நகரானது மாவட்டத்தின் தலைநகரமாக செயல் படுகிறது. இங்கு ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. 

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம், மாவட்ட சமூகநலத்துறை போன்ற பல அரசு அலுவலகங்கள் தனியாக பிரிக்கப்பட்டு தென்காசியில் அமைய உள்ளது.

    ஆகையால் மேலும் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தென்காசி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே தென்காசி நகருக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல் நகர்ப்புற வளர்ச்சி மற்றும்  குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே.என்.நேருவிடமும் ஒரு மனு கொடுத்தார். 

    அதில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றி யம் கரையாளனூர், மற்றும் ரதமுடையார்புரம் பகுதியில் இருக்கிற உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு வருகிற தாமிரபரணி தண்ணீர் அளவு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் தொட்டி நிரம்புவதற்கு பல நாட்கள் ஆகிறது.

    அதனால் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது.

    எனவே நீர் தேக்க தொட்டியில் வரும் நீரின் அளவை அளவீடு செய்து அதற்கான கருவி மாட்டியும் தினமும் குறிச்சான்பட்டி ஊராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×