search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

    குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கடந்த 3-ந் தேதி இரவு 8.30 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர் குனியமுத்தூர் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உக்கம் பெரிய குளம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பதை அவர் அழைத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அது குனியமுத்தூர் பகுதியை காட்டியது.

    விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த பீர்முகமது என்ற பச்சை மிளகாய் (வயது 40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்தனர். குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பீர் முகமது ஏற்கனவே குடிபோதையில் மெரினா கடற்கரையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து கைதானவர் ஆவார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருந்தார். இந்தநிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கிக்கொண்டார்.
    Next Story
    ×