search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரீசுடன் போலீசார்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரீசுடன் போலீசார்.

    தென்காசியில் ரூ.3½ கோடி ஆம்பர் கிரீஸ் பறிமுதல்: 2 பேருக்கு வலைவீச்சு

    வனத்துறை அதிகாரிகள் அவர்கள் 2 பேரிடமும் ஆம்பர் கிரீசை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? யாரிடம் விற்பதற்காக எடுத்து வந்தனர்? என்பது குறித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.


    தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா தலைமையிலான போலீசார் நேற்று பழைய பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது சாலையோரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் அருகில் சென்று டிரைவரிடம் விசாரித்தனர்.

    காரில் டிரைவர் தவிர ஒருவர் மட்டுமே இருந்தார். அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ஆம்பர் கிரீஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சுமார் 21 கிலோ எடை கொண்ட அந்த ஆம்பர் கிரீசின் மதிப்பு ரூ.3½ கோடி ஆகும். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அதில் காரில் வந்தவர்கள் குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல் ரோஸ்(வயது 46), நெல்லை தாழையூத்தை சேர்ந்த மோகன்(52) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை கடையநல்லூர் வனச்சரக அலுவலரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து கடையநல்லூர் வனச்சரக ரேஞ்சர் சுரேசிடம் 2 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்கள் 2 பேரிடமும் ஆம்பர் கிரீசை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? யாரிடம் விற்பதற்காக எடுத்து வந்தனர்? என்பது குறித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், சென்னையை சேர்ந்த வியாபாரி கமல்பாபு என்பவருக்கும், எங்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் தன்னிடம் இருப்பதாகவும், அதனை யாரிடமாவது விற்றுக்கொடுத்தால் கமி‌ஷன் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனால் பணத்துக்கு ஆசைப்பட்டு, நாங்கள் 2 பேரும் தென்காசி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை தொடர்பு கொண்டோம். அவரும் ஆம்பர் கிரீசை வாங்க சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து சென்னையில் இருந்து போலீசார் கண்ணில் சிக்காமல் காரில் மறைத்து வைத்து கமல்பாபு அந்த ஆம்பர் கிரீசை கடத்தி கொண்டு வந்தார். பின்னர் நாங்கள் 3 பேரும் தென்காசிக்கு கொண்டு சென்றோம்.

    அப்போது பழைய பஸ் நிலையம் அருகே ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக காரை நிறுத்தி இருந்தோம். கமல்பாபு கடைக்கு சென்ற நேரத்தில் தான் போலீசாரிடம் நாங்கள் சிக்கிவிட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே தென்காசி போலீசார் காரில் இருந்த 2 பேரையும் விசாரித்ததை பார்த்ததும் கடையில் நின்ற கமல்பாபு தப்பி ஓடிவிட்டார்.

    தொடர்ந்து ஜெயக்குமார் செல்போனுக்கு வனத்துறையினர் போன் செய்தனர். ஆனால் அவர் ‘சுவிட்ச் -ஆப்’ செய்து விட்டு தலைமறை வானார்.

    இதையடுத்து தலைமறைவான 2 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்தால் தான் ஆம்பர் கிரீஸ் எங்கிருந்து கிடைத்தது? யாருக்கு விற்கப்படுகிறது? என்பது தெரியவரும்.

    Next Story
    ×