search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வெட்டை திறந்து வைத்த ஸ்டாலின்
    X
    கல்வெட்டை திறந்து வைத்த ஸ்டாலின்

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.894 கோடியில் 134 புதிய திட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ரூ.98 கோடியே 77 லட்சம் மதிப்பில் முடிவடைந்துள்ள 90 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    தஞ்சாவூர்:
     
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்கள், முடிவடைந்த பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு என 4 பெரும் விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று மாலை தஞ்சை வந்தார். 

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மற்றும் தொண்டர்கள்  திரண்டு வந்து வரவேற்பளித்தனர். 

    பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது வெண்கல சிலையை திறந்து வைத்தார். அவருக்கு கட்சியினர் வீரவாள் பரிசாக அளித்தனர்.
    இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவில்  தனியார் ஓட்டலில் தங்கினார்.

    இந்த நிலையில் 2-ம் நாளான இன்று அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்கி இருந்த ஓட்டலில் இருந்து விழா நடைபெறும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்துக்கு சென்றார்.

    விழாவானது திருவையாறு அரசு இசைப் பள்ளி ஆசிரியர்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன்  தொடங்கியது. 

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சக்கரபாணி, மெய்யநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்  மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ரூ.98 கோடியே 77 லட்சம் மதிப்பில் முடிவடைந்துள்ள 90 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட மணிக்கூண்டுடன் கூடிய ராஜப்பா பூங்கா, கீழவாசல் சரபோஜி மார்க்கெட் கடைகள் திறக்கப்பட்டதும், மண்டல கண் மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தது அடங்கும்.

    மு.க. ஸ்டாலின்

    தொடர்ந்து ரூ.894 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 134 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

    மேலும் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 16 அரசுத் துறைகளின் சார்பில் ரூ.238 கோடியே 40 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் தொடங்கப்பட்ட திட்டங்கள், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.1231 கோடியே 74 லட்சத்தில் திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த விழாவில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தேசிய கீதம் பாடப்பட்டு விழா முடிவடைந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் , தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×