search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீல்
    X
    சீல்

    திருச்சியில் மாணவர்களுக்கு சப்ளை- குட்காவை பதுக்கி விற்ற புத்தக கடைக்கு ‘சீல்’ வைப்பு

    திருச்சியில் மாணவர்களுக்கு குட்காவை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக புத்தக கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    திருச்சி:

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நந்தி கோவில் பகுதியில் ஏராளமான ஜெனரல் ஸ்டோர் என்ற பெயரில் ஏராளமான புத்தக கடைகள், ஸ்டே‌ஷ்னரி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அதே பகுதியில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

    இங்குள்ள ஒரு புத்தகம் விற்பனை மற்றும் ஜெனரல் ஸ்டோரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கடந்த ஆகஸ்டு 10-ந்தேதி சோதனை மேற்கொண்டார்.

    இதில் 128 கிலோ பான் மசாலா, குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்டப்பூர்வ மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    இருந்தபோதிலும் அந்த கடைக்காரர் தொடர்ந்து குட்கா விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மீண்டும் கடந்த 10-ந்தேதி புக் ஸ்டோரில் அதிரடி சோதனை மேற்கொண்டு குட்கா கைப்பற்றப்பட்டது. பின்னர் அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தனர்.

    இது தொடர்பான தகவல்கள் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் புக் மற்றும் ஜெனரல் ஸ்டோருக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதுபற்றி டாக்டர் ரமேஷ் பாபு கூறும்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2008-ன் கீழ் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றார். மேலும் அந்த கடையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து குட்கா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதா? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×