என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
பெரம்பலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற திமுக பிரமுகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பெரம்பலூரில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக திருச்சி சரக போலீஸ் டி.ஜ.ஜி. அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து டி.ஜ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் தெப்பகுளம் அருகே உள்ள சின்ன தெற்கு தெருவை சேர்ந்த மருதமணி என்ற மாது(வயது 36), முத்துநகரை சேர்ந்த வடிவேல் (54), திருநகரை சேர்ந்த தண்ணீர்த்தொட்டி சுரேஷ்(37), வடக்கு மாதவி சமத்துவபுரத்தை சேர்ந்த முனியாண்டி மகன் ரவிக்குமார் (31), இந்திரா நகரை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் கலை என்ற சிவா (29) என்பது தெரியவந்தது.
இதில் மருதமணி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணியின் துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, 5 பேரையும் கைது செய்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ஆயிரத்து 880 ரூபாய் மற்றும் ஒரு கார், மொபட், 7 செல்போன்கள், 3 ஹார்டு டிஸ்க்கள், 3 மெமரி கார்டுகள், 2 பென்டிரைவ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






