என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிளுடன் தடுமாறி விழுந்த தச்சுத்தொழிலாளி பலி

    சாலையில் காய வைத்த நிலக்கடலையையொட்டி வைக்கப்பட்ட கட்டையின் மீது ஏறியதில் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி விழுந்த தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருட கம்ப தெருவை சேர்ந்த குமாரின் மகன் மணிகண்டன்(வயது 34). தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கும், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த கவுரிக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 நாட்களாக கோடங்குடியில் உள்ள அவரது மனைவி வீட்டில் மணிகண்டன் குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து தா.பழூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது கோடங்குடி கிராம எல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினர், அவர்களின் வீட்டு முன்பு கும்பகோணம் -ஜெயங்கொண்டம் சாலையில் நிலக்கடலைகளை காய வைத்து, அவற்றின் மீது வாகனங்கள் ஏறிவிடாமல் இருப்பதற்காக ஓரங்களில் உருட்டு கட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். அந்த வழியாக மணிகண்டன் வந்தபோது எதிர்பாராதவிதமாக, நிலக்கடலைகளின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு உருட்டுக்கட்டை மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் மணிகண்டன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து தா.பழூர் போலீசில் கவுரி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சாலையில் எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லாமல் நிலக்கடலை காய வைத்து விபத்தை ஏற்படுத்தியதாக கோடங்குடி கிராமத்தை சேர்ந்த ரவி(45) மீது பொதுப்பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு ஏற்படுத்தியதற்காக இ.பி.கோ. 283 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×