என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடராஜர் கோவில் தேரோட்டம்
    X
    நடராஜர் கோவில் தேரோட்டம்

    சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

    மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று நடராஜர் கோவிலில் தோரோட்டம் நடைபெற்றது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா, ஆருத்ர தரிசன விழா மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ர தரிசன விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேரோட்ட விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    எனவே இன்று (19-ந்தேதி) தேர்த்திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்களிடையே கேள்வி எழும்பியது. என்றாலும் பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க. வினர் தேர்நிலையான கீழ ரதவீதியில் நேற்று மாலை திரண்டனர். தேர்த்திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அங்கு சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அங்கு விரைந்தார். சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பக்தர்கள் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால்தான் இங்கிருந்து செல்வோம் என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இந்த தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிர மணியத்துக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் இதுபற்றி ஆலோசித்து இரவு 7.30 மணியளவில் தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கினார். இதனால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி தேரோட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதிக்கு வந்தனர்.

    அங்கு தனித்தனி தேர்களில் சுவாமிகள் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் மகிழ்ச்சி பெருக்குடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர்களுக்கு முன்னால் திருவாசக குழுவினர் தேவாரம், திருவாசகம் பாடியபடி சென்றனர். அதோடு நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினர். தேர்களில் சுவாமிகள் ரதவீதிகளில் வந்ததால் அந்த பகுதி முழுவதும் கோலங்கள் போடப்பட்டிருந்தது. கைலாய வாத்தியங்கள் முழங்கின.

    அதன் பின்னர் தேர்கள் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேர் நிலையை இன்று மாலை வந்தடைகிறது.

    அதன் பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 9 மணியளவில் தேர்நிலையான கீழரத வீதியில் இருந்து சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் தேர்நிலையில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்துக்கு செல்வார்கள்.

    அங்கு இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. நாளை (20-ந்தேதி) அதிகாலை 3 மணியளவில் சிறப்பு அபிஷேகத்துடன் திருஆபரண அலங்கார காட்சியும், புறப்பாடும் நடைபெறும்.

    தேரோட்டம்

    மதியம் 2 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரிக்கு பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங் கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ர தரிசன காட்சி அளிப்பார்கள்.

    இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது.

    21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    தேரோட்ட விழாவையொட்டி நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவையொட்டி சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    Next Story
    ×