search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அன்பழகன் பெயரில் மாளிகை, சிலை- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

    சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் மார்பளவு சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
    சென்னை:

    தி.மு.க அரசின் அமைச்சரவையில், பல்வேறு கால கட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், தி.மு.க.வின் நீண்டகால பொதுச் செயலாளராக 1977 முதல் 2020 வரை இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன்.

    அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 07.03.2020 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

    இந்நிலையில், 2021 சட்டபேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், “நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்த பாதையில் நாம் வந்திருக்கிறோம். அதனால், நாம் அவர்களுக்கு மரியாதையைத் திருப்பி செலுத்துகிறோம்.

    அதனை நிறைவேற்றும் வகையில், நிதித்துறையின் ஒரு பெரிய கட்டிட வளாகம் சென்னை நந்தனத்தில் இருக்கிறது. அந்த கட்டிடத்திற்கு, முன்னாள் நிதி அமைச்சர் க.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதனை நிறைவேற்றும் விதமாக, நாளை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயர்சூட்டி, நாட்டுடைமையாக்கப்பட்ட அவரின் நூல்களுக்கு அரசின் நூலுரிமைத் தொகையையும் அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    மேலும், அவ்வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியரின் மார்பளவு சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் க.அன்பழகன் குடும்பத்தினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    Next Story
    ×