search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு திருடர்களை போலீசார் கைது செய்து, மீட்ட ஆடுகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்தபோது எடுத்த படம்
    X
    ஆடு திருடர்களை போலீசார் கைது செய்து, மீட்ட ஆடுகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்தபோது எடுத்த படம்

    ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது- 42 ஆடுகள் மீட்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு 42 ஆடுகள் மீட்கப்பட்டன.
    புதுக்கோட்டை:

    ஆடு திருடர்களை விரட்டி பிடித்த போது திருச்சி நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஆடு திருடர்களை பிடிக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருச்சி சரகத்தில் ஆடு திருடர்களை பிடிக்க டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தனிப்படையினர் நடத்திய சோதனையில் ஆடு திருடும் கும்பலான மச்சுவாடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 25), போஸ்நகரை சேர்ந்த கோபி (22), அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (20), காமராஜ புரத்தை சேர்ந்த புஷ்பராஜ் (20), காந்திநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 ஆடுகள் மீட்கப்பட்டன.

    ஆடுகளை திருட பயன்படுத்திய சரக்கு வேனும் கைப்பற்றப்பட்டன. மேற்கண்ட ஆடுகளை திருமயம், நமணசமுத்திரம், பனையப்பட்டி, பொன்னமராவதி ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டவை என தெரியவந்தது. இவர்கள் கும்பலாக சென்று ஆடுகளை திருடி வந்துள்ளனர். தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×