search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதியேற்பு
    X
    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதியேற்பு

    எதிரிகளை வெல்வதற்கு இனிமேலும் விடமாட்டோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதியேற்பு

    அம்மாவின் ஆட்சியிலே, சிறப்பான திட்டங்கள்; மக்கள் செழிப்பான திட்டங்கள்... ஏழைகள் பசியாற அம்மா உணவகங்கள்; எளியவர்கள் நலம் பெறவே, அம்மா மருந்தகங்கள்... அதன் பெயர் மாற்ற நினைக்கின்றார்.

    சென்னை:

    ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அந்த வாசகம் வருமாறு:-

    இந்திய வரலாற்றில், இணையில்லா நம் தலைவி; தமிழக வரலாற்றில், நிகரில்லா நம் தலைவி; தமிழ் இனத்தில், துரோகிகளை வென்றெடுத்த வீரமங்கை; தாய்க்குலத்தின் துயர் துடைத்த, கருணை கொண்ட ஈரமங்கை; எதிரிகளின் சூழ்ச்சிகளை, உடைத்தெறிந்த இரும்பு மங்கை; தமிழர்களின் இதயங்களில், இனிக்கின்ற கரும்பு மங்கை, நம் அம்மா. நம் உணர்வுகளில் நிறைந்திட்ட நம் அம்மா... நம் உதிரத்தில் நிறைந்திட்ட நம் அம்மா... மறைந்திட்ட இந்நாளில், கடல்போல் தொண்டர்கள் கூட்டம்... உறுதி ஏற்க; சபதம் ஏற்க; குவிந்திட்ட வீரர் கூட்டம். தீயசக்தி தீண்டாமல், தமிழ் நாடு தலைநிமிர, கழகம் தந்தார் நம் தலைவர்... வள்ளல் தந்த கழகத்தை, அரண்போல காத்து நின்ற, நம் அம்மாவின் வழி நடக்க, உறுதி ஏற்கிறோம்.

    பசியில்லா தமிழ் நாட்டை உருவாக்கி, மெருகேற்றி; தலைசிறந்த மாநிலமாய், பலர் போற்ற... பார் போற்ற... வாழ்ந்திட்ட நம் அம்மா, அழியாத புகழ் சிறக்க, உறுதி ஏற்கிறோம்.

    நம் அம்மாவின் ஆட்சியிலே, அழகான தமிழ் நாடு; வளமான தமிழ் நாடு... கொலை இல்லை; கொள்ளை இல்லை... மக்களின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை... அதை மீண்டும் அமைப்பதற்கு; ஓய்வின்றி உழைப்பதற்கு; உறுதி ஏற்கிறோம்.

     

    ஓ.பன்னீர்செல்வம்

    பொய்யான வாக்குறுதி பல தந்து... தமிழர்களை ஏமாற்றி, நாடாளும் பொய்யர்களின், குடும்பத்தின் ஆட்சிக்கு, முடிவெழுத உறுதியேற்கிறோம்.

    அம்மாவின் ஆட்சியிலே, சிறப்பான திட்டங்கள்; மக்கள் செழிப்பான திட்டங்கள்... ஏழைகள் பசியாற அம்மா உணவகங்கள்; எளியவர்கள் நலம் பெறவே, அம்மா மருந்தகங்கள்... அதன் பெயர் மாற்ற நினைக்கின்றார்; அம்மாவின் புகழ் மறைக்க நினைக்கின்றார்... திட்டத்தை நிறுத்திட்டால், அவர்களின் கொட்டத்தை அடக்கிடுவோம் என்று, உறுதி ஏற்கிறோம்.

    பொய் வழக்குகள் பல போட்டு, நம்மை முடக்கிவிட நினைப்போரின், ஆணவத்தை அடக்கிடுவோம். நம் கழகத்தை அழித்திடலாம் என, பகல் கனவு காண் போரின் சதி வலையை அறுத்தெறிவோம் என, உறுதி ஏற்கிறோம்

    ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்தென்றார்; ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக் கடன் ரத்தென்றார்; ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி குறையுமென்றார்; செய்தாரா... செய்தாரா... பொய் முதல்வர் செய்தாரா... விடமாட்டோம்.. விடமாட்டோம்.. இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற, விடமாட்டோம் என்று உறுதியேற்கிறோம்.

    அம்மாவின் ஆட்சியிலே, மழை வந்தால் குடையானோம்; புயல் வந்தால் துணை நின்றோம்; பெருவெள்ளம் வந்தாலும், தண்ணீர் தேங்கவில்லை... நம் சேவைகள் ஓயவில்லை... இன்றைய மக்கள் விரோத ஆட்சியிலே, தெருவெங்கும் தண்ணீர்... தண்ணீர்... தமிழர்களின் விழிகளிலே கண்ணீர்... கண்ணீர்... தீயசக்தி ஆட்சியிலே, தண்ணீரும் வடியவில்லை; தமிழர் வாழ்வும் விடியவில்லை! மாற்றுவோம்... மாற்றுவோம்... இந்த அவல நிலையை மாற்றுவோம்... இந்த ஆட்சியை மாற்றுவோம்; இந்த ஆட்சியை மாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

    கடந்த உள்ளாட்சித் தேர்தலிலே, சதிகள் பல செய்து வெற்றி பெற்றார்கள். அதிகார பலம் கொண்டு வெற்றி பெற்றார்கள். வருகிறது... வருகிறது; மீண்டும் வருகிறது; நகர்ப்புற உள்ளாட்சிக்கு, தேர்தல் வருகிறது... தருகிறது, தருகிறது; நமக்கு உத்வேகம் தருகிறது; உற்சாகம் தருகிறது. இனி, பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து, எதிரிகள் வெற்றி பெற முடியாது; வெற்றி பெற விடமாட்டோம்; வெற்றி பெற விடமாட்டோம்.

    புரட்சித் தலைவரின், ரத்தத்தின் ரத்தங்களாக, புரட்சித் தலைவி அம்மாவின், சிங்க நிகர்த் தொண்டர்களாக, ஒன்று படுவோம்... ஒன்றுபடுவோம்; எதிரிகளை, வென்று விடுவோம்... வென்று விடுவோம்... வெற்றிகள் குவித்திடுவோம்... குவித்திடுவோம் என்று, சபதமேற்கிறோம்.

    நம் கழகம் ஒரு இரும்புக் கோட்டை. எந்தக் கொம்பாதி கொம்பனாலும், அசைக்க முடியாத எஃகுக் கோட்டை என்ற, வரலாற்றை மாற்று வதற்கு, விட மாட்டோம்; விடமாட்டோம்; எதிரிகளை வெல்வதற்கு, இனிமேலும் விடமாட்டோம் என்று, உறுதி ஏற்கிறோம்... உறுதி ஏற்கிறோம்... நம் இதய தெய்வம் அம்மாவின், நினைவு நாளில் இன்று உறுதி ஏற்கிறோம்.

    நிலைக்கட்டும் புரட்சித் தலைவரின் புகழ்; வெல்லட்டும் புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்; இனிமேல் எப்பொழுதும் வெற்றிகள் தான்; எங்கெங்கும் வெற்றிகள் தான் என்று, உறுதி ஏற்கிறோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    இதையும் படியுங்கள்... கோவாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நில உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்படும்: ப.சிதம்பரம்

    Next Story
    ×