search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு- அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

    மேட்டூர் அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய நீர் இருப்பு, மழையையொட்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்தும் அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    மேட்டூர்:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணை உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் உபரி நீரேற்று திட்டப்பணிகளை விரைவு படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளையும், மேட்டூர் அணை நீர் இருப்பு பற்றியும் ஆய்வு செய்தவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மேட்டூருக்கு வந்தார். பின்னர் இரவு அவர், மேட்டூர் பொதுப்பணித்துறை மாளிகையில் தாங்கினார்.

    மேட்டூர் அணை

    இதையடுத்து இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை பார்வையிட்டார். அப்போது அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய நீர் இருப்பு, மழையையொட்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என அறிவுரைகளும் வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, மேட்டூர் திப்பம்பட்டியில் நடந்து வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, சோதனை முறையில் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதை பார்த்து அந்த பணிகளின் நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது நீர்வளத்துறை அரசு கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 


    Next Story
    ×