search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    பா.ஜனதா மதவாத அரசியலுக்கு கோவில்களை அனுமதிப்பதா? சீமான் கண்டனம்

    கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டப் பொதுத்தளங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும், கட்சியின் வேர்பரப்பலுக்கும், தன்னலச் செயல்பாடுகளுக்கும் பா.ஜ.க.வினர் பயன்படுத்த முனைவது வன்மையானக் கண்டனத்திற்குறியது.

    தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது?

    அத்துமீறிக் கோயிலுக்குள் நுழைந்து பா.ஜ.க.வினர் திரையிட்டபோதும் அதனைத் தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை. இத்தகையச் செயல்களில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது இதுவரை எவ்வித வழக்கும் தொடுக்காது தி.மு.க. அரசு அமைதிகாப்பது ஏன்?

    கோயில்களும், வழி பாட்டுத்தலங்களும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப்பரப்புரைக் கூடங்களாக மாறுமென்றால், அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்.ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எனும் கேள்விக்கு என்னப் பதிலுண்டு! பா.ஜ.க.வை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி, மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்து வாக்கு வேட்டையாடிய தி.மு.க., தற்போது அதிகாரமிருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஏன்?

    தமிழக அரசு

    ஆகவே, இனிமேலாவது பா.ஜ.க.வின் மதவாத செயல்பாடுகளுக்குத் துணைபோகாது, கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...2 நாட்களுக்கு சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    Next Story
    ×