search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி 48 ஆயிரம் பேருக்கு 600 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 26 ஆயிரம் நபர்களில் முதல் தவணையாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 638 நபர்களுக்கும் (87 சதவீதம்), 2-வது தவணையாக 1 லட்சத்து 77 ஆயிரத்து 430 நபர்களுக்கும் (25 சதவீதம்) ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    வாரம் தோறும் நடைபெறுகின்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை முதல் தவணை 98 ஆயிரத்து 404 பேருக்கும், 2-வது தவணை 44 ஆயிரத்து 637 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் நாளை (ஞாயிறுக்கிழமை) நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம் 600 மையங்களில் செலுத்துவதற்கு ஏற்ப தடுப்பூசி செலுத்துவோர் மற்றும் பயனாளிகளை முகாம்களுக்கு அழைத்து வர காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

    இந்த தடுப்பூசி மெகா முகாமில் 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையொட்டி ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தினந்தோறும் ஆட்டோ அறிவிப்பு மற்றும் வீடு வீடாக சென்று விழிப்புணரவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு அவர்களின் வீட்டு்க்கு சென்று நடமாடும் மருத்துவக்குழுவின் மூலம் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    2-வது தவணை தடு்ப்பூசி செலுத்த வேண்டிய அனைத்து பயனாளிகளின் விவரங்கள் அந்தந்த வட்டாரம் மற்றும் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் தவறாமல் முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை ஊராட்சி. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    4 வாரங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் (வருவாய் துறை, உள்ளாட்சிதுறை, சுகாதாரத் துறை, பள்ளி கல்வித்துறை, அங்கன்வாடி) மற்றும் இந்த மாவட்டத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி, செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து தற்காத்து கொள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×