search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

    முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மீது சோதனை என்ற பெயரில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து தி.மு.க. மீது புகார் மனு அளித்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பாக்கெட்டை நிரப்புவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு அதை மறைப்பதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய்யான வழக்கை போட்டுக்கொண்டு இருக்கிறது.

    அவர்களது குறிக்கோளே ஊழல், வசூல் செய்தல், பழி வாங்குதல். அதைத்தான் இன்றைக்கு தி.மு.க. அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்ததுதான் 100 நாள் சாதனை.

    தி.மு.க. அரசு பதவி ஏற்ற 100 நாளில் மக்கள் சோதனை, வேதனையை தான் அடைந்திருக்கிறார்கள். அம்மா ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இந்த ஆட்சியில் கிடப்பில் போட்டுள்ளனர்.

    அம்மா ஆட்சியில் கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அந்த திட்டத்தையும் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

    கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது போடப்பட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதை வேக வேகமாக முடிப்பதில் இப்போதைய தி.மு.க. அரசு கவனம் செலுத்துகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மீது சோதனை என்ற பெயரில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பி வருகிறார்கள்.

    மேலும் தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கொடநாடு இல்லத்துக்கு ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். அதற்காக அந்த இல்லத்தை கட்டி வைத்திருந்தார்.

    வேண்டும் என்றே திட்டமிட்டு சயனின் கூட்டாளிகள் அத்துமீறி இல்லத்துக்கு சென்று கொள்ளையடித்து காவலாளியை கொலை செய்தனர். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது.

    முக ஸ்டாலின்

    இந்த தருணத்தில் கொடநாடு வழக்கில் புதிதாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம் என்கிறார். தேர்தல் அறிக்கைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பவம்.

    சட்டத்தின் ரீதியாக நடந்து வரும் நீதிமன்றத்தின் வழக்கை இதில் ஒப்பிடக்கூடாது. இந்த வழக்கு டிராபிக் ராமசாமியால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு அந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு வரும்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதுமட்டுமல்ல இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஒவ்வொரு முறை வரும்போதும் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று 3 நீதிபதிகள் தனித்தனியாக உத்தரவு வழங்கி இருக்கிறார்கள்.

    இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருமே கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். இது தொடர்பாக கேரளாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தி.மு.க. அரசு எதற்காக இவ்வளவு அக்கறையோடு வாதாடிக்கொண்டு இருக்கிறது.

    ஏற்கனவே அந்த குற்றவாளிகளுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள
    தி.மு.க.
    வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகி வாதாடி இருக்கிறார். இந்த வழக்கு கோர்ட்டில் வரும்போதெல்லாம் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அவர்களுக்காக வாதாடி இருக்கிறார்கள்.

    ஊட்டியில் உள்ள செசன்ஸ் கோர்ட்டிலும் இந்த குற்றவாளிகளுக்காக தி.மு.க. வக்கீல்கள் வாதாடி உள்ளனர். ஒரு அரசு, குற்றவாளியை தண்டிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக இருக்கக்கூடாது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இன்றைக்கு வேண்டும் என்றே சயன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு ரகசிய வாக்குமூலம் பெற்றதாகவும், அதில் என்னையும் இணைத்துக்கொண்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்திகள் சொல்கின்றன.

    நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாமலேயே காவல் துறையின் மூலமாக அரசின் தலையீடு காரணமாக மீண்டும் சயானை அழைத்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் இறுதி விசாரணை மட்டுமே பாக்கி இருக்கிறது.

    இப்படி இருக்கும்போது மறுவிசாரணை வேண்டும் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அப்படியானால் இதுவரை போலி குற்றவாளியையா கண்டுபிடித்தோம். இந்த வழக்கு முறையாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, நேரடியாக அரசியலை சந்திக்க முடியாத
    தி.மு.க.
    இன்றைக்கு குறுக்கு வழியில் இந்த வழக்கை பொய்யாக ஜோடித்து திசை திருப்ப பார்க்கிறார்கள். அவர்கள் வெள்ளை அறிக்கை என்று வெற்று அறிக்கை வெளியிட்டார்கள். அது மக்களிடம் எடுபடவில்லை.

    மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் என்றார்கள். கவர்னர் உரையின்போது நான் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டேன். பெற்றோர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள் என்றேன்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றீர்கள். அது என்ன ஆயிற்று என்று கேட்டபோது மழுப்பலான பதிலை சொன்னார். பொய்யான கருத்தை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளார்கள். நீட் தேர்வில் இன்று வரை சரியான முடிவு எட்டப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×