என் மலர்
செய்திகள்

கோவையில் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.12¼ லட்சம் பணம் கொள்ளை
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. கொரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக ஷோரூமை மேலாளர் குனியமுத்தூரை சேர்ந்த ரமேஷ்பாபு (வயது 45) என்பவர் இரவு 9 மணிக்கு பூட்டி விட்டு சென்றார். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், காவலாளி கழிவறைக்கு சென்ற நேரத்தில் ஷோரூமின் பின் பக்கம் சென்றனர். அங்கு இருந்த ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் ஷோரூமின் கல்லாவில் இருந்த ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 500 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலை ஷோரூமை திறக்க வந்த மேலாளர் கல்லாவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் ஷோரூம் முழுவதும் சென்று பார்த்த போது கொள்ளையர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்தது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த 4 பேரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நுழைந்து ரூ. 12,42,500 பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். ஷோரூமில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது முகத்தில் முககவசம் அணிந்து கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்தும் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






