என் மலர்
செய்திகள்

புதுவை வேட்பாளர்களில் 74 பேர் கோடீஸ்வரர்கள்
புதுச்சேரி:
புதுவை தேர்தல் கண்காணிப்பாகத்தின் சார்பில் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் பிரமாண பத்திரங்கள் ஆய்வறிக்கை வெளியிடபட்டுள்ளது.
களத்தில் உள்ள 324 வேட்பாளர்களில் (முழு ஆவணமில்லாத சுயேட்சை வேட்பாளர் ஒருவரை தவிர்த்து) 323 வேட்பாளர்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் குறிப்பிட்டார்.
இதில் 323 வேட்பாளர்களின் பொருளாதார பின்னணி சுவாரஸ்யமாக உள்ளது. அதன் விவரம்:
புதுவையில் ஆய்வு செய்யப்பட்ட 323 வேட்பாளர்களில் 74 பேர் (23 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்கள். கடந்த 2016-ல் 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வர வேட்பாளராக இருந்தனர்.
அதனை ஒப்பிடுகையில் கடந்த முறையை விட கோடீஸ்வர வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 8 பேரும் (89 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 12 பேரும் (86 சதவீதம்), என்.ஆர்.காங்கிரசில் 16 வேட்பாளர்களில் 13 பேரும் (81 சதவீதம்), அ.தி.மு.க.வில் 5 வேட்பாளர்களில் நால்வரும் (80 சதவீதம்), தி.மு.க.வில் 13 வேட்பாளர்களில் 9 பேரும் (69 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.
புதுவை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.14 கோடி. இது கடந்த 2016-ல் ரூ. 2.49 கோடியாக இருந்தது. கட்சிவாரியாக சராசரி சொத்து மதிப்பு விவரம்:
என்.ஆர்.காங்கிரசில் 16வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 10.79 கோடி. பா.ஜனதா வேட்பாளர்கள் 9 பேரின் சொத்து மதிப்பு ரூ. 9.89 கோடி. அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரின் சராசரி சொத்து மதிப்பு 9.1 கோடி. தி.மு.க. வேட்பாளர்கள் 13 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.03 கோடி. காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடி.
உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளரும் என்.ஆர்.காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட நேருவின் சொத்து மதிப்பு ரூ. 43 கோடியாக உள்ளதால் அவர் வேட்பாளரில் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 38 கோடி. காங்கிரஸ் மாநிலத் தலைவரும், காரைக்கால் வடக்கில் போட்டியிடும் ஏ.வி. சுப்பிரமணியன் 3-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 27 கோடி.
சொத்தே இல்லை என்று ஊசுடு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபிமன்னன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் வடக்கு தொகுதியில் இந்திய ஜனநாயகக்கட்சியில் போட்டியிடும் அருளானந்தம், காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நெப்போலியன், நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் தங்களிடம் ரூ. 500 மட்டுமே உள்ளதாக சொத்து மதிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
புதுவையில் போட்டியிடுவோரில் 178 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் காமராஜ் நகர் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஷாஜகான் தனக்கு ரூ. 20 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டு கடனில் முதலிடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு ரூ. 14 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டு 2-ம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளரும் வில்லியனூரில் போட்டியிடும் சிவா தனக்கு ரூ. 10 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
323 வேட்பாளர்களில் 25 பேர் தங்களின் பான் எண்ணை தெரிவிக்க வில்லை.
திருநள்ளாரில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஆண்டு வருவாய் ரூ. 1.9 கோடி என குறிப்பிட்டு முதலிடத்திலும், வில்லியனூரில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சுகுமாரன் ஆண்டு வருவாய் ரூ. 1.11 கோடியாகவும், உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு ஆண்டு வருவாய் ரூ. 76 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.






