search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

    புதுவையில் தேர்தல் முடிந்த பின்னர் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும்- கவர்னர்

    புதுவை மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு அவர் கேபினட் அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்கள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பொது விநியோக திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் பணத்தின் பலன் சரியாக கிடைக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

    பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அது இன்று (நேற்று) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்று மட்டும் 2,400 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். இதேபோல் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் நாளை (அதாவது இன்று) முதல் செயல்படுத்தப்படும்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா தலைமையில் தென்மாநில கூட்டம் திருப்பதியில் வருகிற 4-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளேன். அதை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவேன். ஏற்கனவே சாலைவசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைத்துள்ளோம்.

    புதுவையில் ஜனாதிபதி ஆட்சி என்றாலும் மக்களுக்கான திட்டங்களை நிர்வாகம் செய்யும் இடம் சட்டசபை வளாகம். எனவே தான் நாங்கள் இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். எங்கு நடந்தது என்பது பெரிதல்ல. மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்களுக்கு சட்டசபையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் நடைமுறையில் 1 சதவீதம் கூட சட்ட விதிமீறல் இருக்காது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பஸ் இயக்குவது குறித்து தலைமை செயலாளரிடம் பேசியுள்ளோம். விரைவில் செயல்படுத்தப்படும். விமான நிலைய விரிவாக்கம் தேவையான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கேட்டபோது, ‘தமிழகத்தில் தேர்வு ரத்து செய்தது தமிழக அரசின் கொள்கை முடிவு. புதுவை மாநிலத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே அவர்களுக்கு தேர்வு நடத்தலாம்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தற்போது எதுவும் அறிவிக்க முடியாது. ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். அப்போது மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகேட்டு அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
    Next Story
    ×