search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமி
    X
    என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமி

    புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை- எதிர்க்கட்சியினர் மனு

    நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2016-ம் ஆண்டு தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி தொடர்கிறது.

    புதுவை சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆட்சியை பிடிப்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதற்காக ஆளுங்கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை மேற்கொண்டது. அதன் பலனாக காங்கிரஸ் அமைச்சரவையில் 2-ம் இடம் வகித்து வந்த நமச்சிவாயம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

    இதற்கிடையே மற்றொரு அமைச்சரான மல்லாடிகிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.

    நேற்று முன்தினம் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு அவர் கடிதம் அனுப்பினார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜான்குமார் புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

    புதுவை சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் உள்ளனர். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உறுதிபடுத்தி உள்ளது.

    இதுவரை 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர். கட்சி தாவல்தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது.

    இதில் பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால் தற்போது ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு (சபாநாயகர் உள்பட) 10, தி.மு.க. 3, சுயேச்சை 1 என 14 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அதாவது சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சமமான பலத்தில் உள்ளன.

    எனவே பெரும்பான்மையை இழந்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு சென்று திரும்பிய பின் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.

    என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், அதிமுக அன்பழகன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

    புதுச்சேரி கவர்னர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது செயலாளரிடம் மனு அளித்தனர்.
    Next Story
    ×