என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் 9-ந்தேதிக்கு மாற்றம்

    சசிகலா வருகையால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார தேதியில் மாற்றம் செய்து 8-ந்தேதிக்கு பதிலாக வரும் 9-ந்தேதி என இறுதி செய்யப்பட்டு அ.தி.மு.க.வினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, வருகிற 8-ந்தேதி வேலூர் மாவட்டம் வழியாக சென்னை திரும்பவுள்ளார். வழிநெடுகிலும் அவரை வரவேற்க அ.ம.மு.க. நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சசிகலாவால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, முதலில் பிப்.7-ந்தேதி சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    ராணிப்பேட்டை, வேலூரில் 8-ந்தேதி பிரசாரம் செய்கிறார் என்று அ.தி.மு.க.வினர் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல்வர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்பதால், அவரை வரவேற்கவும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வந்தனர்.

    ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரசாரம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்தனர். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் வேக வேகமாக இறுதி செய்தனர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சசிகலாவின் வருகை 7-ந் தேதிக்கு பதிலாக 8-ந்தேதி என மாற்றப்பட்டதால் அ.ம.மு.க.வினர் மட்டுமில்லாது அ.தி.மு.க.வினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

    வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா வருகையும், வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரசாரமும் ஒரே நாளில் நடைபெறுகிறது என்ற தகவல் 2 கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் ஒரே நாளில் முதல்வரின் பிரசாரமும், சசிகலா வருகையும் காவல்துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் முதல்வரின் பிரசார தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது.

    இந்நிலையில் எதிர்பார்த்தபடி முதல்வரின் பிரசார தேதியில் மாற்றம் செய்து 8-ந்தேதிக்கு பதிலாக வரும் 9-ந்தேதி என இறுதி செய்யப்பட்டு அ.தி.மு.க.வினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல்வரை வரவேற்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

    “வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரம் 8-ந்தேதி என தெரிந்தும் சசிகலா வருகைக்கான தேதி திட்டமிட்டு மாற்றப்பட்டது. 2 கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பும் சர்ச்சையும் ஏற்படக்கூடாது என்பதை முதல்வரும் விரும்புகிறார்.

    இதற்காக, சசிகலா வருகைக்கு முதல்வர் வழிவிட்டுள்ளார். இதற்கு, மேலும் அவர்கள் தேதி மாற்றாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    8-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் வரும் 9-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரல்களில் எந்த மாற்றமும் இல்லை” என்றனர்.

    ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    Next Story
    ×