என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  புதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை - தமிழக தேர்தல் ஆணையம் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும் வகையிலான புதிய திட்டத்தை தமிழக தேர்தல் ஆணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது.

  அதன்படி, கடந்த 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இறந்து போனவர்களின் பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக கடந்த நவம்பர் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

  இதைத்தொடர்ந்து பெயர்களை சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 15-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு அவற்றை பரிசீலித்து மாவட்ட வாரியாகவும், சட்டமன்ற தொகுதி வாரியாகவும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

  இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோன்று 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

  இதில், 4 லட்சத்து 80 ஆயிரத்து 953 பேர் ஆண்கள். 4 லட்சத்து 16 ஆயிரத்து 423 பேர் பெண்கள். 318 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். புதிய வாக்காளர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை அந்தந்த பகுதியின் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வினியோகிக்கப்படும்.

  தற்போது முதல் முறையாக வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும் வகையில் விரைவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது. இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

  இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

  வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் செயலி மற்றும் இணையதளம் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோன்று, கணினி மூலம் நகல் எடுத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

  புதிதாக சேரும் வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தான் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக தபால் துறையுடன் இணைந்து விரைவு தபால் மூலம் புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

  தானியங்கி எந்திரம் மூலம் வாக்காளர் அட்டை பெறும் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான எந்திரங்களை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நிறுவும் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவு பெறும்.

  தானியங்கி எந்திரம் மூலம் வாக்காளர் அட்டை பெறுவதற்கு தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கட்டணத்தை செலுத்திய பின்பு, தானியங்கி எந்திரம் மூலம் வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இனிமேல் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் சிரமம் இருக்காது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×