search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி காரைக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கக்கோரியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    காரைக்குடி நகராட்சி சார்பில் வளர்ச்சி திட்ட பணிக்காக ரூ.112.53கோடி நிதியை பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரை காரைக்குடி நகர் பகுதியில் இந்த பணிகள் நடைபெற்று முடிந்த 39 இடங்களில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளை இணைக்கும் குழாய் அமைத்து அதன் மீது கான்கிரீட் தொட்டி அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் புதிதாக போடப்பட்ட சாலைகளும், கான்கிரீட் அமைப்புகளும் தரமற்ற நிலையில் உள்ளதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    எனவே இந்த சாலையை அமைத்த ஒப்பந்தக்காரர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பாதா சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி காரைக்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு பொங்கல் விழா முடிந்ததும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.எல்.ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தி.க, ம.தி.மு.க கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×