search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலை சேறும், சகதியுமாக இருப்பதை காணலாம்.
    X
    பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலை சேறும், சகதியுமாக இருப்பதை காணலாம்.

    பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகர் வளர்ச்சி பணிக்காக பாதாள சாக்கடை திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.125 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி காரைக்குடி நகரில் உள்ள பெரும்பாலான இடத்தில் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. தற்போது காரைக்குடி செஞ்சை, வைத்திலிங்கபுரம் ஆகிய பகுதியில் நடைபெற்ற நிலையிலும், காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் காரைக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும், ஒரு சில இடங்களில் பெரும் பள்ளமாக கிடப்பதால் தினந்தோறும் காரைக்குடி பகுதி மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பலனில்லை. இந்நிலையில் காரைக்குடி 34-வார்டிற்கு உட்பட்ட வைத்திலிங்கபுரம், பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த பகுதியில் புதிதாக சாலைகள் போடாததால் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாகவும், சில இடங்களில் சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சேதமான சாலைகள் பல்வேறு இடங்களில் பெரும் பள்ளமாக இருப்பதால் இந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் கீழே விழுந்து தினந்தோறும் காயங்களுடன் செல்லும் நிலையும் உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெகநாதன் கூறும்போது, காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியில் சுமார் 300 வீடுகளுக்கும் மேல் உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இப்பகுதி மக்களை ஒன்று திரண்டி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
    Next Story
    ×