search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுக்கொண்டு சென்றதை படத்தில் காணலாம்.
    X
    பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுக்கொண்டு சென்றதை படத்தில் காணலாம்.

    முத்தூர் பகுதியில் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    முத்தூரில் கடும் மூடுபனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
    முத்தூர்:

    முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் கடும் மூடுபனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் முத்தூர் கடைவீதி, வெள்ளகோவில் சாலை, காங்கேயம் சாலை, கொடுமுடி சாலை, ஈரோடு சாலை, நத்தக்காடையூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் மூடுபனிப்பொழிவு காரணமாக தார்ச்சாலையே கண்ணுக்கு தெரியாத அளவில் காணப்பட்டது.

    மேலும் அனைத்து வெளிப்பகுதி சாலைகளிலும். பொது இடங்களிலும் பனிப்பொழிவு சாரல் மழை பெய்து பனிப்புகை சூழ்ந்து உள்ளது போல் காணப்பட்டது. மேலும் சாலையின் முன்புறம் சுமார் 1 அடி தூரத்திற்கு உள்ளேயே எதிரே நிற்பவர்கள் மற்றும் வாகனங்கள் ஏதும் கண்ணுக்கு தெரியாத அளவில் கடும் மூடு பனிப்பொழிவு பெய்தது.

    இப்பகுதிகளில் நேற்று சாரல் மழை போல் பெய்த கடும் மூடுபனிப் பொழிவு காரணமாக சாலையில் அதிகாலை நேரத்தில் சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள்,லாரி. கார், டெம்போ, சரக்கு ஆட்டோ உட்பட கனரக வாகனங்கள் மற்றும் சைக்கிள், மொபட், மோட்டார் சைக்கிள் ஆகிய இருசக்கர வாகனங்கள் காலை 8:30 மணி வரை முன்புற முகப்பு விளக்குடன் மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.

    மேலும் இந்த பனிப்பொழிவால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் அதிகாரிகள், ஊழியர்கள் பணியாளர்கள்.

    அதிகாலையிலேயே பனியன் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட பல இடங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆண். பெண் கூலி தொழிலாளர்கள் பலர் பனிப்பொழிவில் நனைந்தபடியும் துணி மற்றும் குல்லாவால் முகத்தை மூடியபடியும் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.

    மேலும் இந்த கடும் மூடுபனிப்பொழிவால் நகர மற்றும் கிராம பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் சூரியன் உதித்து வெயில் வெளிச்சம் மேலே ஏறி வந்து தலைகாட்டியவுடன் மிதமான வெயிலின் தாக்கத்தினால் பனிப்பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக விலகி இயல்புநிலை திரும்பியது.

    கடந்த 2 வாரங்களாக கிராமப்பகுதிகளில் ஏற்பட்டிருந்த பனிப்பொழிவு குளிர் நேற்று காலை முதல் நகர பகுதிகளிலும் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×